மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் தேனி எம்.பி., எச்சரிக்கை

1

உசிலம்பட்டி : 'மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்காவிடில் போராட்டங்கள் தொடரும்' என உசிலம்பட்டியில் தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

உசிலம்பட்டி நகர் தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சுமை துாக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது. நகரச் செயலாளர் தங்கப்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். தேனி எம்.பி., தங்கத்தமிழ்செல்வன் நலத்திட்ட உதவிகள் வழங்கி கூறியதாவது:

மத்தியில் பா,ஜ., அரசு 11 ஆண்டுகளில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஏ.டி.எம்.,ல், பணம் எடுத்தால் ரூ.23 அதிகரித்ததைவிட, விவசாயிகள் நகைக்கடன் வட்டியை மட்டும் செலுத்தி, கடனை புதுப்பிக்கலாம் என இருந்ததை, வட்டியுடன் அசலையும் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிப்பர். இது மத்திய அரசின் நிதிநிலை சரி இல்லை என்பதை காட்டுகிறது.

வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்த பணம் ரூ.4100 கோடியை தமிழகத்திற்கு வழங்கவில்லை. ஆறு மாதங்களாக சம்பளம் இல்லாமல் லட்சக்கணக்கான பெண்கள் பணி செய்கின்றனர். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணத்தை நியாயமாக கேட்கிறோம்.

மத்திய அரசு நிதியை தமிழகத்திற்கு கொடுக்கவில்லை என்பதை பாமர மக்கள் தற்போதுதான் புரிந்து கொண்டுள்ளனர்.

கல்வி நிதி, ரயிலுக்கான நிதி, மெட்ரோவிற்கான நிதி போன்றவற்றை முறையாக வழங்க வலியுறுத்தி இன்னும் பல்வேறு போராட்டங்கள் தொடரும் என்றார்.

Advertisement