டிரம்ப் முடிவால் இந்திய பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும்: சிதம்பரம்

38



புதுடில்லி: "இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு அதிக வரி விதிப்பது என்று டிரம்ப் முடிவு எடுத்தால் அது நம் நாட்டுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரியை விதித்துள்ளது. இந்த வரிவிதிப்பு வரும் ஏப்., 2ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலடியாக வரி விதிக்கப் போவதாகவும் அறிவித்து இருந்தார். இந்த சூழலில், அமெரிக்க பைக்குகள், விஸ்கிகள் மீதான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க வரி விதிப்பு விவகாரத்தில், பார்லிமென்ட்டில் விவாதமோ அல்லது எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை என்று ராஜ்யசபாவில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது; அமெரிக்கர்கள் நிலையான முடிவை எடுக்காதவர்கள். ஆனால், உங்களுக்கு மாற்று சூழ்நிலைகள் இருக்க வேண்டும். அவர்கள் ஒரு அடி முன்னேறினால் நமது பதில் என்னவாக இருக்கும். அவர்கள் 2 அடி பின்னோக்கி வைத்தால், நமது பதில் என்னவாக இருக்கும். உங்களின் பதிலை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.


ஆனால், குறைந்தபட்சம் பார்லிமென்ட்டில் ஒரு அறிக்கையாவது வெளியிடலாம். அல்லது எதிர்க்கட்சிகளுடன் ஒரு ஆலோசனையாவது நடத்தியிருக்கலாம். இந்த விவகாரத்தில் நாங்கள் இருளடைந்து இருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, பல அமைச்சர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அமெரிக்காவின் இந்த நிலையற்ற கொள்கைக்கு எதிரான எதிர் கொள்கையை யார் வகுக்கப் போகிறார்கள் என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை.


விவசாயம், ஜவுளி, தொழிற்சாலை பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. மேலும், உலக சந்தையிலும் நாம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறோம். இப்படிபட்ட சூழலில், அதிபர் டிரம்ப், ஒரு நாட்டை மட்டும் தேர்வு செய்து, அதிக வரிகளை விதித்தால், அந்த நாட்டின் பொருளாதாரம் அழிக்கப்பட்டு விடும்.


ஒருவேளை, மற்ற நாடுகளை விட்டு விட்டு, இந்தியாவை அதிபர் தேர்வு செய்தால், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிகள் விதிக்கப்படும். இதனால், 3 அல்லது 6 மாதங்களில் நமது பொருளாதாரம் முற்றிலும் அழிந்து போய் விடும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement