கோவில் அருகே தொழுகைக்கு இடம் ஒதுக்கீடு; தாசில்தார் செயலால் மோதல் உருவாகும் அபாயம்

52


ஓமலுார்: ஆடு, பன்றி பலியிடும் கருப்பணார் கோவில் அருகே, தொழுகை நடத்துவதற்காக காடையாம்பட்டி தாசில்தார் இடம் ஒதுக்கிய செயல், அப்பகுதியினர் இடையே மோதல் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, ஹிந்து முன்னணியினர் மற்றும் கிராம மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டி அருகே அய்யன் காட்டுவளவு பகுதியில் கருப்பணார் சமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. அப்பகுதியில் பன்றி, ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திகடன் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், காடையாம்பட்டி தாசில்தார் நாகூர்மீரான், அய்யன்காட்டுவளவு கருப்பணார் கோவிலின் ஒரு பகுதியில், சிறிய கரடு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில், 1.63 ஏக்கர் நிலத்தை பொக்லைன் இயந்திரம் கொண்டு சமப்படுத்தியுள்ளார்.



அப்பகுதி மக்கள், ஹிந்து முன்னணியினர் திரண்டு தாசில்தாரிடம் கேட்ட போது, 'நிரவப்பட்ட பகுதி முஸ்லிம்கள் தொழுகைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார். எதிர்ப்பு தெரிவித்த மக்கள், 'பல ஆண்டுகளாக கருப்பணார் சமுண்டீஸ்வரி கோவிலின் ஒரு பகுதியாக பன்றி, ஆடு, கோழிகளை பலியிட்டு விழா கொண்டாடி வருகிறோம். இப்பகுதியில் தொழுகைக்கு இடம் ஒதுக்கப்பட்டால் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்படும்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார் சமாதானம் செய்தனர்.


இச்சம்பவம் குறித்து, அப்பகுதியினர் சார்பில் அய்யன்காட்டுவளவு பகுதி இந்திராணி, 55, தீவட்டிப்பட்டி போலீசில் அளித்துள்ள புகாரில், 'காடையாம்பட்டி தாசில்தார் இடம் ஒதுக்கீடு செய்துள்ளது மத உள்நோக்கத்துடன் உள்ளது. இதனால் இருதரப்புக்கும் பிரச்னை ஏற்படும். எங்கள் கோவில் வழிபாட்டு உரிமையை மீட்டு தர வேண்டும். சட்டவிரோதமாக மசூதி கட்ட அனுமதிக்க கூடாது' என, தெரிவித்துள்ளார்.


ஹிந்து முன்னணி சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, சண்முகம் ஆகியோர் நேற்று முன்தினம், தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்துள்ள புகாரில், 'தாசில்தார் நாகூர்மீரான், ஜமாத் தலைவர் போல் நேரடியாக நின்று அப்புறப்படுத்தியுள்ளார். இது முற்றிலும் மத உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. எங்களின் மத உரிமைகளை பறிக்கும் செயல். கோவில் இடத்தையும், ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகளையும் மீட்டு தர வேண்டும்' என, கூறியுள்ளனர்.


இந்நிலையில், நிரவப்பட்ட இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் முட்டுக்கல் அமைத்துள்ளனர். தாசில்தார் நாகூர்மீரானிடம் கேட்ட போது, ''ஆண்டுக்கு இரு முறை முஸ்லிம்கள் தொழுகை நடத்த மட்டும், 15 அடிக்கு 15 என்ற அளவில், சிறிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. யாரிடமும் ஒப்படைக்கவில்லை,'' என்றார்.


கருப்பணார் கோவில் வழிபாடு நடந்த இடத்தில், தொழுகைக்கு இடம் ஒதுக்கியுள்ளதாக தாசில்தார் கூறியுள்ளது, மோதலை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளதாக அப்பகுதியினர் அச்சம் தெரிவித்துள்ளனர். கலெக்டர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement