ராஜ்யசபா தேர்தலில் இறுதியாகும் கூட்டணி!

25


சென்னை: வரும் ஜூலையில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலின்போது, 2026 சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., கூட்டணியும் இறுதியாகி விடும் என்கின்றனர் பா.ஜ., கட்சியினர்.

கடந்த 25ம் தேதி, டில்லி சென்ற அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். கடந்த 2023 செப்டம்பர் 25ல், பா.ஜ.,வுடனான கூட்டணியை அ.தி.மு.க., முறித்துக் கொண்டது. அதன்பின், தற்போதுதான் அமித் ஷாவை, தம்பிதுரை, கே.பி.முனுசாமி, வேலுமணி, சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பழனிசாமி சந்தித்துள்ளார்.



தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து கோரிக்கை வைக்கவே அமித் ஷாவை சந்தித்ததாகவும், கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்வதாகவும், பழனிசாமி கூறியுள்ளார். ஆனால், கூட்டணி தொடர்பாகவே முக்கிய பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது.


இச்சூழலில், அமித் ஷாவின் அவசர அழைப்பில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று, டில்லி சென்றுள்ளார். ஜனவரி இறுதிக்குள் நடக்க வேண்டிய தமிழக பா.ஜ., தலைவர் தேர்தல் இன்னும் நடக்கவில்லை. 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தெளிவான பாதையை முடிவு செய்து விட்டு, தமிழக தலைவர் தேர்தல் நடத்த அமித் ஷா விரும்புவதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் பழனிசாமியை தொடர்ந்து, பா.ஜ., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று, அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், அண்ணாமலை டில்லியில் முகாமிட்டுள்ளார்.



இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மற்ற மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளை தி.மு.க., ஒருங்கிணைத்து வருவதை, ஆபத்தின் அறிகுறியாகவே பா.ஜ., தலைமை பார்க்கிறது. 2026 சட்டசபை தேர்தலில் வென்று, தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைத்தால், பா.ஜ.,வுக்கு எதிராக தேசிய அளவில் பெரிய அணி திரட்டுவர். அது, 2029 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.


எனவே, வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை எப்படியாவது தோற்கடித்தே ஆக வேண்டும் அல்லது தி.மு.க., பெரும்பான்மை பெறுவதை தடுக்க வேண்டும். இதுதான், தமிழகத்துக்கான அமித் ஷாவின் அரசியல் திட்டம். அதற்காக, எதையும் செய்ய, அவர் தயாராக இருக்கிறார். அதனால், கட்சியில் எந்த மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம்.


இது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர்கள் எச்.ராஜா, வானதி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருடன், அமித் ஷா தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்று பொன்.ராதாகிருஷ்ணனும் அமித் ஷாவை சந்தித்துள்ளார். வலுவான கூட்டணி இல்லாமல், தி.மு.க.,வை வீழ்த்த முடியாது என்பதால், அதற்கான முயற்சியில் அமித் ஷா ஈடுபட்டுள்ளார்.


வரும் ஜூலையில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலின்போது, வரும் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., கூட்டணியும் இறுதியாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement