த.வெ.க.,வினர் வைத்த தண்ணீர் பந்தலுக்கு அதே கட்சியினர் எதிர்ப்பு

1

திண்டிவனம்: த.வெ.க.,வினர் திறந்த தண்ணீர் பந்தலை அகற்றக்கோரி, அதே கட்சியை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டையில், கொடியம் கிராமத்தை சேர்ந்த த.வெ.க., நிர்வாகி மணிகண்டன் தலைமையில் அக்கட்சியினர் சிலர் நேற்று முன்தினம் தண்ணீர் பந்தலை திறந்தனர்.

இந்நிலையில், த.வெ.க., மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களான பாஞ்சாலம் பூமிநாதன், பட்டணம் சமத்துவபுரம் சிவலிங்கம் ஆகியோர், வெள்ளிமேடுபேட்டை போலீசில், மணிகண்டன் த.வெ.க., கட்சியை சேர்ந்தவர் இல்லை. அவர் திறந்து வைத்த தண்ணீர் பந்தலை அப்புறப்படுத்த வேண்டும் என புகார் அளித்தனர்.

போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடந்த 10 ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கத்தில் இருப்பதாகவும், தற்போது கட்சியில் உறுப்பினராக உள்ளதாகவும் மணிகண்டன் கூறினார். மேலும், திறப்பு விழாவிற்கு மாவட்ட செயலர் நிரஞ்சன் வர முடியாத சூழ்நிலையால் தாங்களே திறந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து, வெள்ளிமேடுபேட்டையில் வேறு இடத்தில் தனியாக தண்ணீர் பந்தலை திறந்து கொள்ளுங்கள் என, சிவலிங்கம், பூமிநாதன் தரப்பினரை சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

Advertisement