68 ஆண்டுகளுக்கு பின் 3 கருட சேவை

துாத்துக்குடி: நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவிலில் 68 ஆண்டுகளுக்குப் பின் மூன்று கருட வாகனங்களில் எழுந்தருளிய கருட சேவை நடந்தது.

துாத்துக்குடி மாவட்டத்தில் தாமிபரணி ஆற்றங்கரையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சுற்றி அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் 3 வது ஸ்தலமான திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவில் விளங்குகிறது. இங்கு பங்குனி உற்சவ திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவிழா நாட்களில் தினமும் சுவாமி காய்சினிவேந்த பெருமாள் காலையில் பல்லக்கில் வீதி புறப்பாடும், இரவில் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.

ஐந்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு காலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்தியல் கோஷ்டி, பின்னர் திருமஞ்சனம் நடந்தது. கருட சேவையை முன்னிட்டு இரவு ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளப்பிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளிங்குடி காய்சினவேந்தர் ஆகிய மூன்று பெருமாள்களும் திருப்புளியங்குடி கோவில் வளாகத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

தீபாராதனைக்கு பின்னர் மூன்று கருட வாகனங்களில் மூன்று பெருமாள்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவிலில் கடந்த 1957ம் ஆண்டு வரை ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் ஆகிய மூன்று சுவாமிகளும் கருட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்துள்ளது.

பின்னர், கடந்த ஆண்டு வரை நடந்த பங்குனி திருவிழாக்களில் திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கருட சேவை மட்டுமே நடந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 68 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தற்போது ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் ஆகிய சுவாமிகள் கருட வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement