சிவாஜி வீட்டை 'ஜப்தி' செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக்கோரி நடிகர் பிரபு மனு

சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை, 'ஜப்தி' செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மகனும், நடிகருமான பிரபு மனு தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள 'ஈசன் சினிமா' தயாரிப்பு நிறுவனம், 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தது.
விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை தயாரிக்க, 'தனபாக்கியம் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்திடம், துஷ்யந்த் 3.75 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.
இக்கடனை ஆண்டுக்கு, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.ஆனால், கடன் தொகையை திருப்பித் தராததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் மத்தியஸ்தரை நியமித்தது.
அவர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால், 'சென்னை தி.நகரில் உள்ள நடிகர் துஷ்யந்தின் தாத்தாவான சிவாஜி வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'போதுமான அவகாசம் வழங்கியும், பதில் மனு தாக்கல் செய்யாததால், நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதை நீக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் பிரபு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன் விபரம்: நடிகர் சிவாஜி கணேசன் உயிருடன் இருந்த போதே, அன்னை இல்லம் வீட்டை எனக்கு உயில் எழுதி வைத்து விட்டார். என் அண்ணன் ராம்குமார் சார்ந்த நிதி பிரச்னையில், என் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
என் பெயரில், 'அன்னை இல்லம்' பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சகோதரர் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே, வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன், அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






மேலும்
-
'அப்பர்-அமராவதி'- 60 ஆண்டுகளாக இழுபறி! கரூர், திருப்பூர் மாவட்டத்தில் அதிருப்தி
-
மூன்றாவது முறை அதிபர் பதவி: நகைச்சுவை அல்ல என்கிறார் டிரம்ப்
-
மருத்துவமனையில் பாலியல் தொந்தரவு: விசாரணை தீவிரம்
-
இறைச்சி கோழி வேன் கவிழ்ந்து விபத்து
-
இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை
-
தமிழ்ச்சங்கத்தில் மகளிர் நாள் விழா