துாணைத் தொட்டால் ரூ.1,000 அபராதம்; மதுரை திருமலை நாயக்கர் மகால் நிர்வாகம் எச்சரிக்கை

7

மதுரை: 'மதுரை திருமலை நாயக்கர் மகால் துாண்கள் மற்றும் சுவர்களில் கிறுக்கினால் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்' என மகால் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மகாலின் முன்புற தர்பார் ஹாலின் தரைத்தளம், பக்கவாட்டு காரிடார்களின் தரைத்தளம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்க மன்னர் வரலாறு குறித்த புதிய லேசர் லைட்டிங் ஷோ மே மாதம் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார். இந்நிலையில் தர்பார் ஹால் துாண்களின் அருகிலேயே ஒலி ஒளி காட்சிகள் அமைப்பதற்கான ஒயரிங் பணிகள் நடக்கின்றன. துாண்களில் வண்ணப்பூச்சு முடிந்த நிலையில் முன்பகுதி தர்பார் ஹாலை பார்வையிடுவதற்கு மட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.



உள்பகுதியில் உள்ள நாடகசாலை, பள்ளியறை பகுதிகளில் இன்னமும் பணிகள் முடியவில்லை. 2023 ஏப்ரலில் துவங்கிய பணி 2024 நவம்பரில் முடிந்திருக்க வேண்டும். இரண்டு மேல் மாடங்களிலும் மழையால் ஏற்பட்ட ஈரம் படிந்து சேதம் அதிகமாக இருந்ததால் அவற்றை புதுப்பிப்பதற்கு மட்டும் ஆறு மாதங்களானது. அடுத்ததாக நாடக சாலையில் உள்ள 24 வட்ட துாண்கள் புதுப்பிக்கப்பட்டு சுவர்களுக்கும் சேர்த்து செந்நிறம் பூசப்பட்டுள்ளது. அடுத்துள்ள பள்ளியறையிலும் வேலை நடப்பதால் துாண்களின் மீது துாசி படியாமல் இருக்க பிளாஸ்டிக் கவரால் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

பள்ளியறையில் உள்ள 12 சதுர துாண்களின் கீழ்ப்பகுதியில் லைட்டிங் அமைப்பதற்கான ஒயரிங் வேலைகள் நடக்கின்றன. அதன் பின் தரைத்தளம் அமைக்கப்படும். மகாலின் பக்கவாட்டில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் அமைத்து பழங்கால கற்சிலைகள் பாதுகாக்கப்படுகின்றன. சிலைகளுக்கு மட்டும் தனியாக மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்தபின் நுாலகத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கி விடும். மூன்று மாதங்களில் மகால் முழுமையாக பார்வையாளர்களுக்கு தயாராகி விடும்.



ரூ.10 கோடிக்கும் மேல் செலவு செய்து புதுப்பிக்கும் பணிகள் நடப்பதால் துாணிலோ, சுவரிலோ யாராவது கிறுக்கினால் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதற்காகவே கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளதாக மகால் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement