நான் வங்கப்புலி; முடிந்தால் மோதிப் பாருங்க: ஆக்ஸ்போர்டு பல்கலையில் சவால் விட்ட மம்தா

45


லண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரை நிகழ்த்திய போது, குறுக்கிட்ட மாணவர்கள், ஆர்.ஜி.,கர் மருத்துவமனை சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.


பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையின் கெல்லாக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது, சில மாணவர்கள் அவரது பேச்சை குறுக்கிட்டு கோஷமிட்டதுடன், தேர்தலுக்குப் பிந்தைய கலவரம் மற்றும் ஆர்.ஜி.,கர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதனால், சுதாரித்துக் கொண்ட மம்தா, பொறுமையுடன் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

அவர் கூறியதாவது: ஆர்.ஜி.,கர் சம்பவம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பது உங்களுக்கு தெரியுமா? இந்த வழக்கு விசாரணை தற்போது மத்திய அரசின் கைகளில் உள்ளது. எங்களிடம் ஏதுமில்லை. இங்கு அரசியல் செய்யக் கூடாது. அதற்கான இடம் இது கிடையாது. என் மாநிலத்திற்கு வந்து, அங்கு என்னுடன் அரசியல் செய்யுங்கள்.

பொய் செல்லக் கூடாது. உங்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கிறது. இங்கு அரசியல் செய்வதற்கு பதிலாக, மேற்கு வங்கத்திற்கு சென்று, உங்கள் கட்சியை பலப்படுத்தி, எங்களிடம் சண்டையிடச் சொல்லுங்கள். என்னை அவமதித்து உங்கள் கல்வி நிறுவனத்தை அவமதிக்காதீர்கள். ஒரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி நான் இங்கு வந்துள்ளேன். உங்கள் நாட்டையும் நீங்கள் அவமதிக்காதீர்கள்.

மீண்டும் என்னை இங்கு வருவதற்காக என்னை ஊக்குவித்துள்ளீர்கள். உங்கள் சகோதரியான நான், யாரைப் பற்றியும் கவலைப்படமாட்டேன். வங்கப் புலி போல நடைபோடுவேன். முடிந்தால் பிடித்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement