கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலை ஜூன் 1ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைப்பு!

கோவை: கோவை எல்.அண்ட் டி பைபாஸ் சாலை, தரம் உயர்த்தும் பணி துவங்குவதை முன்னிட்டு ஜூன் 1ம் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
கோவையில் நிலவும் வாகன போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் எல் அண்ட் பைபாஸ் சாலை. கோவை, அவிநாசி சாலையில், நீலம்பூரில் இருந்து பாலக்காடு சாலையில் மதுக்கரை வரையிலான இந்த பைபாஸ் சாலை 28 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது.
'பை ஓன் டிரான்ஸ்பர்' (பிஓடி) திட்டப்படி இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் மூலம் செயல்படுத்தப்பட்ட ஆரம்ப கால திட்டங்களில் இதுவும் ஒன்று. 104 கோடி ரூபாயில் இரு வழிச்சாலையாக இந்த சாலை அமைக்கப்பட்டது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள், கோவை நகர நெரிசலில் சிக்காமல் கடந்து ஈரோடு, திருச்சி நோக்கி செல்லவும், அதேபோல எதிர் திசையில் வரும் வாகனங்கள் நெரிசல் இன்றி கேரளா செல்லவும் இந்த பைபாஸ் சாலை பேருதவியாக இருக்கிறது.
கடந்த 1999ம் ஆண்டு இந்த சாலை திறந்து வைக்கப்பட்டது. சாலை அமைத்த எல் அண்ட் டி நிறுவனத்துக்கு 30 ஆண்டுகள் சுங்க வசூல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமம் 2029 வரை எல் அண்ட் டி வசம் உள்ளது. இந்நிலையில், இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது.
4 வழிச்சாலை மற்றும் இரு புறமும் சர்வீஸ் சாலைகள் அமைத்து தரம் உயர்த்தும் பணிக்காக, இந்த சாலையானது, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் வரும் ஜூன் 1ம் தேதி முதல் சுங்க வரி வசூலை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தொடங்க உள்ளது. பைபாஸ் சாலையில் தற்போது 6 இடங்களில் இருக்கும் சுங்கச்சாவடிகள் குறைக்கப்பட்டு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.








மேலும்
-
'அப்பர்-அமராவதி'- 60 ஆண்டுகளாக இழுபறி! கரூர், திருப்பூர் மாவட்டத்தில் அதிருப்தி
-
மூன்றாவது முறை அதிபர் பதவி: நகைச்சுவை அல்ல என்கிறார் டிரம்ப்
-
மருத்துவமனையில் பாலியல் தொந்தரவு: விசாரணை தீவிரம்
-
இறைச்சி கோழி வேன் கவிழ்ந்து விபத்து
-
இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை
-
தமிழ்ச்சங்கத்தில் மகளிர் நாள் விழா