சர்ச்சை மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்?

3

துண்டால் பெஞ்சை தட்டியபடியே அமர்ந்த பெரியசாமி அண்ணாச்சி, ''தொகுதியை கண்டுக்கலன்னு புலம்புதாவ வே...'' என்றார்.

''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தி.மு.க., - அ.தி.மு.க.,வுல, கட்சி ரீதியா திருவொற்றியூர், மாதவரம் சட்டசபை தொகுதிகள் அடங்கிய தனி மாவட்டம் செயல்படுது... தி.மு.க.,வுல, மாதவரம் எம்.எல். ஏ., சுதர்சனமும், அ.தி.மு.க., வுல மாதவரம், 'மாஜி' எம்.எல்.ஏ., மூர்த்தியும் மாவட்ட செயலர்களா இருக்காவ வே...

''இவங்க ரெண்டு பேருமே, மாதவரத்தைச் சேர்ந்தவங்களா இருக்கிறதால, திருவொற்றியூரை கண்டுக்கிறதே இல்ல... கட்சி நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் மாதவரத்துலயே நடத்துதாவ வே...

''அதுவும் இல்லாம, திருவொற்றியூர், வடசென்னை லோக்சபா தொகுதியிலும், மாதவரம், திருவள்ளூர் லோக்சபா தொகுதியிலும் வருது... இதனால, கட்சி நிகழ்ச்சிகளுக்கு எம்.பி.,க்களை கூப்பிடுறதுலயும் குளறுபடி நடக்கு வே...

''அதனால, திருவொற்றியூருடன், வடசென்னை லோக்சபா தொகுதியில் இருக்கிற இன்னொரு சட்டசபை தொகுதியை சேர்த்து, தனி மாவட்டமாகவும், திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் இருந்து ஒரு சட்டசபை தொகுதியை உருவி, மாதவரத்துடன் சேர்த்து தனி மாவட்டமாகவும் அறிவிக்கணும்னு ரெண்டு கட்சியினருமே சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''ஜிம்மை புதுப்பிச்சு தரணும்னு கேட்கிறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''சென்னை, வேளச்சேரியில், தமிழக விளையாட்டு ஆணையத்தின் நீச்சல் பயிற்சி வளாகத்துலயே, நவீன உடற்பயிற்சிக் கூடம் என்ற பெயர்ல, 'ஜிம்' ஒண்ணு செயல்படுது பா...

''இந்த ஜிம்ல உடற்பயிற்சி பண்றதுக்கு, மாசத்துக்கு 1,800 ரூபாய் வாங்குறாங்க... இதுல, மொத்தம் மூணு உடற்பயிற்சிக் கூடங்கள் இருக்குது பா...

''முதல் கூடத்துல, நடைபயிற்சி செய்ய இருந்த நாலு, 'டிரெட் மில்'களும் ரிப்பேராகவே, அதை அப்புறப்படுத்திட்டாங்க... இங்க, 'ஏசி'க்களும் சரியா வேலை செய்யல பா... இரண்டாம் கூடத்துல, 'ஏசி'யே இல்ல... மூணாவது கூடத்துல, பயிற்சி உபகரணங்கள் உடைஞ்சு சேதமாகி கிடக்குது... இங்கயும், 'ஏசி' வேலை செய்யல...

''இதனால, 'விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி, இங்க ஆய்வு நடத்தி, ஜிம்மை நவீனமாக்க நடவடிக்கை எடுக்கணும்'னு பயிற்சிக்கு வர்றவங்க கேட்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''மதபோதகர் மேல புகார்கள் குவியுதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''துாத்துக்குடி- நகரின் முக்கிய பகுதியில் இருக்கும் சர்ச், துாத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகத்துல இருக்கு... இதுல, போதகரா இருக்கிறவர் மேல ஏகப்பட்ட புகார்கள் குவியுதுங்க...

''அதாவது, 'உண்டியல் காணிக்கை பணம், சர்ச் பணத்துல முறைகேடு பண்ணியிருக்காரு... சர்ச்சுக்கு வந்த பெண்ணிடம் தப்பா நடந்துக்கிட்டாரு... அவரது பாலியல் சீண்டல்கள் சம்பந்தமா, அவரது மனைவியிடம் விசாரிச்சாலே நிறைய உண்மைகளை புட்டுப்புட்டு வைப்பாங்க... மதபோதகர் மேல நடவடிக்கை எடுக்கலன்னா, போராட்டத்துல ஈடுபடுவோம்'னு திருமண்டல நிர்வாகத்துக்கு பலரும் புகார்களை அனுப்பியிருக்காங்க...

''அந்த சர்ச் நிர்வாகப் பொறுப்புல, உள்ளூர் பெண் அமைச்சரின் கணவர் குடும்பத்தினர் இருக்காங்களாம்... இதனால, மதபோதகர் மீது நடவடிக்கை எடுத்தா, அவங்களால பிரச்னை வருமோன்னு திருமண்டல நிர்வாகம் தயங்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''நேத்து, சுந்தர புருஷன் படத்தை, 'டிவி'யில பார்த்தேன்... லிவிங்ஸ்டன் அருமையா நடிச்சிருக்காருல்லா...'' என அண்ணாச்சி கூற, நண்பர்கள் பேசியபடியே நடந்தனர்.

Advertisement