அ.தி.மு க., வெளிநடப்பு

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க., - 14; அ.தி.மு.க., - 5; ஐ.ஜே.கே.,- 1; சுயேட்சை - 1 என, 21 கவுன்சிலர்கள் உள்ளனர்.

மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை, தி.மு.க., நகர மன்ற தலைவர் சண்முகம் தலைமையில், நகராட்சி கமிஷனர் ரமேஷ் முன்னிலையில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது.

இதில் 21 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வரவு செலவு குடிநீர், மின் விளக்கு, மழைநீர் வடிகால்வாய் திட்டங்கள் என, 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் திறக்கப்பட்ட 146 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 50 சதவீதத்திற்கு மேல் முறையாக பராமரிக்கப்படவில்லை, வளர்ச்சி திட்ட பணிகள் முறையாக ஆன்லைன் 'டெண்டர்' விடப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நான்கு பேர் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து அ.தி.மு.க., முன்னாள் நகர மன்ற தலைவரும் 10வது வார்டு கவுன்சிலருமான கோபி கண்ணன் கூறுகையில்,''

10 லட்சம் ரூபாய்க்கு மேல் அனைத்து பணிகளும் 'ஆன்லைன் டெண்டர்' விட வேண்டும் என விதி இருந்தும், 4.5 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகாரும், நீதிமன்றத்தில் வழங்கும் தொடர உள்ளோம்,'' என்றார்.

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நால்வர் வெளிநடப்பு செய்த நிலையில், 8வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கஸ்துாரி வெளிநடப்பு செய்யாமல் கூட்டத்தில் பங்கேற்றார்.

Advertisement