ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா காஞ்சி கலெக்டர் கள விசாரணை

காஞ்சிபுரம்:சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றிய பகுதிகளில், 32 கி.மீ சுற்றளவில் உள்ள பெல்ட் ஏரியா பகுதிகளிலும், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் நகரங்களின் எல்லை பகுதியில் உள்ள ஆட்சேபணையுள்ள வண்டிப்பாதை, பாதை, களம், மயானம், தோப்பு மற்றும் ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட கால குடியிருப்புகளாக உள்ள ஆக்கிரமணங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது

இந்த திட்டம் வாயிலாக, ஒரு முறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், தகுதியான நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை பகுதியில் ஒத்தவாடை தெரு, பஜனை கோயில் தெரு, ஓரிக்கை பிரதான தெரு உள்ளிட்ட பகுதிகளில், 5 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க, தகுதிகளை அறியும் வகையில், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப ஆண்டு வருமானம், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆதாரங்கள் களவிசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வு பணியை, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி நேற்று சரிபார்த்தார். மேலும், தகுதியுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சப் கலெக்டர் ஆஷிக் அலி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement