திடக்கழிவுகள் மேலாண்மைக்கு 'துாய்மை இயக்கம்' அமைப்பு; துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

சென்னை : ''தமிழகத்தில் தினமும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய, 'துாய்மை இயக்கம்' என்ற ஒருங்கிணைந்த அமைப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறையில் ஏற்படுத்தப்படும்,'' என, துணை முதல்வர் உதயநிதி அறிவித்தார்.

சட்டசபையில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 'ெஷல்' நிறுவனத்தின் பங்களிப்புடன், விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் மதுரையில் உள்ள, ஆறு அரசு பொறியியல் கல்லுாரிகளில், நவீன கட்டமைப்புடன் கூடிய, உயர்திறன் மையங்கள், 2.50 கோடி ரூபாயில் அமைக்கப்படும்

'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின், 2 கோடி ரூபாய் பங்களிப்பு நிதி வழியாக, இரண்டு அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், செயற்கை நுண்ணறிவு உயர் திறன் மையங்கள் நிறுவப்படும்

நான் முதல்வனின், 'ஸ்கவுட்' திட்டத்தின் கீழ், அரசு கல்லுாரிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, 100 திறமையான மாணவர்களுக்கு, தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில், சிறந்து விளங்கும் அயல்நாட்டு பல்கலைகளுடன் இணைந்து, உலகளாவிய உள்ளுறைப் பயிற்சி வழங்கப்படும்

ஒரு மாணவருக்கு, 1.50 லட்சம் ரூபாய் வீதம், 100 மாணவர்கள் சர்வதேச பயணம் மற்றும் இதர செலவினங்களுக்காக, 1.50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், தினமும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில், ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில், 'துாய்மை இயக்கம்' என்ற ஒருங்கிணைந்த அமைப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கீழ் ஏற்படுத்தப்படும்

தமிழகத்தில் 11 பல்கலைகளில், 'நான் முதல்வன்' பல்கலை செயல் மையங்கள், 1.10 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும். இம்மையங்கள், தொழில் நிறுவனங்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தி, 'இன்டன்ஷிப், அப்ரென்டிஷிப்' வாய்ப்புகள் ஏற்படுத்துதல் போன்ற பணிகளை ஒருங்கிணைக்கும்

நான் முதல்வன்' பாடத்திட்ட சீரமைப்பு பிரிவு மற்றும் மதிப்பீட்டு பிரிவு, 1.50 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

இவ்வாறு துணை முதல்வர் அறிவித்தார்.

Advertisement