காஞ்சியில் 32 பதவிகளுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி பணி தீவிரம்
காஞ்சிபுரம்:காலியாக உள்ள கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு, மே மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 32 பதவி இடங்களுக்கான தேர்தல் நடத்துவதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டியுள்ளது.
தமிழகம் முழுதும், 2021ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. புதியதாக பிரிக்கப்பட்ட ராணிபேட்டை, திருப்பத்துார், வேலுார், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு, அந்தாண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி முதற்கட்டமாகவும், 9ல் இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 ஒன்றியங்களில், 11 மாவட்ட கவுன்சிலர்கள்; 98 ஒன்றிய கவுன்சிலர்கள், 273 ஊராட்சி தலைவர்கள்; 1,938 வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
அதேபோல, 2022ல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிக்கான தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள், பதவியேற்று பணியாற்றி வருகின்றனர்.
தேர்தல் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், நகர்ப்புறங்களில் கவுன்சிலர்கள் பதவியிடங்களுக்கு இன்று வரை இடைத்தேர்தல் நடத்தாமல் உள்ளது.
பதவியேற்ற மக்கள் பிரதிநிதிகளில் சிலர் வயது மூப்பு, உடல் நிலை சரியில்லாத போன்ற காரணங்களால இறந்துள்ளனர். சிலர், பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அவ்வாறு காலியான மக்கள் பிரதிநிதிகளின் பதவியிடங்களுக்கு, ஆறு மாதங்களில் மாநில தேர்தல் கமிஷன் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், தேர்தல் நடத்தாமல், ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்வேறு காரணங்களால், 32 பதவியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பதவியிடங்களுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுதும், மே மாதம் உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
மாநில தேர்தல் கமிஷனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில், இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தீவிரபடுத்தியுள்ளனர்.
தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய, அந்தந்த உள்ளாட்சி அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
ஓட்டுச்சாவடியில் உள்ள வசதி, அமைவிடம் போன்றவை பற்றி ஆய்வு செய்ய உள்ளனர். அடுத்தகட்டமாக, வாக்காளர் பட்டியல் தயார் செய்ய உள்ளனர். வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக, வீடியோ கான்பரசிங் மீட்டிங், தேர்தல் கமிஷன் நடத்தியது. அதில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள எங்களுக்கு கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. முதற்கட்டமாக, ஓட்டுச்சாவடி மையங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அடுத்ததாக, ஏப்ரல் 9 ம் தேதிக்குள், தேர்தல் நடைபெறும் பகுதிக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட வேண்டும். தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விபரங்களை தயாரித்து உத்தரவிட வேண்டும். இப்பணிகளை செய்து முடிக்கும் சூழலில், தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவிப்பார்கள். மே மாதம் தேர்தல் நடத்த ஆயத்த பணிகள் நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!
-
ஜிப்லியில் இணைந்தார் இ.பி.எஸ்; காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என பதிவு