காத்திருந்த போலீசுக்கு 'ட்விஸ்ட்' வைத்த ரவுடி; 'பிடிவாரன்ட்' இருந்தும் பிடிக்காததால் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'

1


மதுரை: மதுரையில் ரவுடி 'கிளாமர்' கார்த்திக் கொலை வழக்கில் கொலையாளிகள் சரணடையலாம் என மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் காத்துக்கொண்டிருந்த நிலையில் 'பிடிவாரன்ட்' உள்ள வேறு ஒரு வழக்கில் கொலையாளி சுள்ளான் பாண்டி சரணடைந்தார். இந்த வழக்கில் அவரை கைது செய்யாமல் மெத்தனமாக இருந்ததாக கூடல்புதுார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டு 'கிளாமர்' கார்த்திக் என்ற காளீஸ்வரன் 32, மார்ச் 22 இரவு தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் ரவுடி வெள்ளை காளி கூட்டாளிகளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 'கிளாமர்' கார்த்திக் மதுரை மாநகராட்சி தி.மு.க., முன்னாள் மண்டல தலைவர் வி.கே. குருசாமியின் சகோதரி மகன். குருசாமிக்கும், அ.தி.மு.க., முன்னாள் மாநகராட்சி மண்டல தலைவர் ராஜபாண்டிக்கும் அரசியல் ரீதியான பகை 22 ஆண்டுகளாக குடும்ப பகையாக மாறி இருதரப்பிலும் மாறி மாறி 22 கொலைகள் நடந்தன.


இதுதொடர்பாக இருதரப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களது கூட்டாளிகளை உள்ளூர் போலீசார் மட்டுமின்றி, சிறப்பு புலனாய்வு பிரிவு, ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு(ஓ.சி.ஐ.யூ.,) போலீசாரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இச்சூழலில்தான் 'கிளாமர்' கார்த்திக் கொலை செய்யப்பட்டார். இதுவரை கொலையாளிகள் யார் என கண்டறியப்படவில்லை. பழிக்குப்பழியாக வெள்ளை காளி கூட்டாளிகள்தான் செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

போலீசார் 'ஷாக்'



இக்கொலை வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளை காளி கூட்டாளி சுள்ளான் பாண்டி என்பவர் சரணடைய உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சரணடையும் முன்பே அவரை கைது செய்ய காத்திருந்தனர். சரணடைய வந்த சுள்ளான் பாண்டி, நீதிமன்ற அறைக்குள் வேகமாக சென்று பதுங்கிக்கொண்டதால் அவரை கைதுசெய்ய முடியவில்லை.


கிளாமர் கார்த்திக் கொலை வழக்கில் சரணடைவார் என்று காத்திருந்த போலீசாருக்கு 'ட்விஸ்ட்' வைத்த சுள்ளான் பாண்டி, கூடல்புதுார் ஸ்டேஷனில் 2021ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 'பிடிவாரன்ட்' உள்ள வழக்கில் சரணடைவதாக கூறினார். பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்யாமல் மெத்தனமாக இருந்ததாக கூடல்புதுார் இன்ஸ்பெக்டர் பாலமுருகனை கமிஷனர் லோகநாதன் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

கோட்டைவிட்ட சிறப்பு பிரிவுகள்



சுள்ளான் பாண்டியை முன்கூட்டியே கைது செய்திருந்தால், 'கிளாமர்' கார்த்திக் கொலையை தடுத்திருக்க வாய்ப்புண்டு. பிடிவாரன்ட் உள்ளவர்கள் குறித்து கமிஷனர் ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். அச்சமயத்தில் சுள்ளான் பாண்டி குறித்து இன்ஸ்பெக்டர் தரப்பில் தகவல் தெரிவிக்காமல் மெத்தனமாக இருந்ததே ஒழுங்கு நடவடிக்கைக்கு காரணம்.


இதுபோன்ற ரவுடிகளை கண்காணித்து முன்கூட்டியே 'அலர்ட்' செய்யும் சிறப்பு புலனாய்வு பிரிவு, ஓ.சி.ஐ.யூ., போலீசாரும் மெத்தனமாக இருந்துள்ளனர். அவர்களுமே சுள்ளான் பாண்டி விஷயத்தில் கோட்டை விட்டுள்ளனர். போலீஸ் துறையில் ஒருங்கிணைப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.

Advertisement