நில அளவை துறை விதிகளில் அதிரடி மாற்றம்?: மக்களின் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு

புதுச்சேரி: நீண்ட காலமாக பட்டா மாற்றம், எல்லை வரையறை செய்வது கிடப்பில் போடப்பட்டுள்ள சூழ்நிலையில், அரசின் உரிமம் பெற்ற நில அளவையர்களை களத்தில் இறக்க நில அளவை துறை தயாராகி வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் ஒருவர் தனி பட்டா பெற வேண்டுமென்றால் குதிரைக்கொம்பு தான். பழங்கால சட்டத்தையே இதுவரை பின்பற்றி வருவதால், மனுதாரருக்கு பட்டா கிடைக்க பல ஆண்டுகள் ஆகின்றன.

நில அளவைத் துறை இயக்குனரிடம் கொடுக்கப்படும் மனு, வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார், தாசில்தார், நில அளவைத்துறை உதவி இயக்குனர், நில அளவையர் என, மாறி மாறி பைல் சுற்றி வரவேண்டியுள்ளது.

ஒவ்வொரு அதிகாரியும், பல மாதங்கள் வரை பைலை கிடப்பில் போடுகின்றனர். இந்த பைலில் ஏதாவது குறையிருந்தால், அதற்கான காரணத்தைக் கூறி திருப்பியும் அனுப்புவதில்லை. இதனால் பட்டா மாற்றம் வேண்டி மனு செய்துவிட்டு, பல ஆண்டுகளுக்கு மேல் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நடையாய் நடக்க வேண்டி இருப்பதாக, பாதிக்கப்பட்டவர்கள் புலம்பி வருகின்றனர்.

நில அளவை துறையில் மொத்தம் 120 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 50 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் தான் நில அளவை செய்து கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கு மாற்றாக நில அளவை பணியில் உரிமம் அடிப்படையில், வெளியாட்களை ஈடுபடுத்த முடிவானது. இதற்காக, கட்டுமான பொறியியல் பட்டதாரிகளுக்கு, நில அளவை பணிக்காக விண்ணப்பமும், டெபாசிட் தொகையும் கூட வசூலிக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு உரிமம் தரப்படவில்லை.

இதற்கிடையில் நில அளவை பணியில் உரிமம் அடிப்படையில் வெளியாட்டுகளை ஈடுபடுத்த நில அளவை துறை தயாராகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளையும் முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக நில அளவை விதிகளிலும் தற்போது திருத்தம் செய்யப்பட்டு வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

விரைவில் நில அளவை துறையால் அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளர்களின் பட்டியல், அவர்களது முகவரி, மொபைல் எண், உரிமம் செல்லுபடியாகும் கால வரம்பு போன்ற விபரங்களுடன் வெளியிடப்பட உள்ளது. இதன் மூலம் அவர்களை பொதுமக்கள் எளிதாக அணுகி நிலங்களை அளக்க முடியும்.

பொதுமக்கள் மட்டுமின்றி அரசு துறைகள் கூட நில அளவை செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் வாய்க்கால், சாலை, கட்டடப் பணிகளுக்கு நில எல்லையை வரையறை செய்ய நில அளவை துறையின் கதவை நீண்ட காலமாக தட்டுகின்றன. ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறையால், அளந்து எல்லைகளை வரையறை செய்து தருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுப்பணிகள் துவங்குவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே உரிமம் பெற்ற நில அளவையர்கள் களத்தில் இறக்கப்பட்டதும், அரசு துறைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளனர். அடுத்து புதிய திருத்தம் பட்டா மாற்ற நடைமுறைகளை எளிமையாக்கப்பட உள்ளதால், மக்களின் நீண்ட கால பிரச்னைக்கும் விடிவுகாலம் பிறந்துள்ளது.

Advertisement