அமைச்சர் வீடு முற்றுகை அன்பழகன் கண்டனம்

புதுச்சேரி: காங்., ஆட்சியில் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தபோது நாராயணசாமி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தாரா என,அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்,கூறியதாவது:

அரசு துறையின் அதிகாரி செய்த முறைகேட்டிற்காக, துறை அமைச்சரை பதவி விலக வலியுறுத்தி அவர் வீட்டை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்., முற்றுகை போராட்டம் நடத்தியது அநாகரீகம்.

சி.பி.ஐ.,யின் நேர்மையான விசாரணையை திசை திருப்பும் செயல். திட்டமிட்டு அமைச்சரை அச்சுறுத்தி மனஉளைச்சலை தர வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டை முற்றுகையிடுவது கேவலமான அரசியல்.

காங்., 5 ஆண்டு கால ஆட்சியில் நடந்த ஊழல், முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தபோது அதற்கெல்லாம் பொறுப்பேற்று நாராயணசாமி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தாரா.

தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைக்கு சென்றார். இதற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலகினாரா.

அவர் பதவி விலக வேண்டும் என தி.மு.க.,வை நாராயணசாமி வலியுறுத்தினாரா. கடந்த தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல் முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்.

ஏனாமில் மக்கள் நலன் கருதி குப்பை பிரச்னையில் கவர்னர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர், கூறினார்.

Advertisement