அறக்கட்டளை நிர்வாகிகள் கவர்னருடன் சந்திப்பு

புதுச்சேரி: உலகத் தமிழ் மாநாட்டினைப் புதுச்சேரி தமிழறிஞர்களை கொண்டு விரைவில் நடத்த வேண்டுமென, பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவர் பாரதி, கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை, பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமையில் செயலாளர் வள்ளி, துணைச் செயலாளர் லட்சுமி, தேவேந்திரநாத் தாகூர், ஐஸ்வரிய லட்சுமி ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது, உலகத் தமிழ் மாநாட்டினை புதுச்சேரி தமிழ் அறிஞர்களைக் கொண்டு விரைவில் நடத்த வேண்டும். கணினி தகவல் தொழில் நுட்பம் படித்த இளைஞர்கள், வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை செய்வதால், குடும்பத்தினரை பிரிந்து பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆகையால், புதுச்சேரியிலேயே பணிபுரியும் வகையில் தொழில்நுட்ப பூங்கா ஏற்படுத்தித் தரவேண்டும். புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைக்க வேண்டும். பாரதிதாசன் பெயரில் அரசு விருதுகள் வழங்க வேண்டும். நீர்நிலைகளைக் பாதுகாக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர்.

Advertisement