மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி இனிதே நிறைவு

கூடுதல் திறமைகளால் சாதிக்கலாம்



'கேரியர் கவுன்சிலிங்' தொடர்பாக தொழில் வழிகாட்டல் ஆலோசகர் டாக்டர் காயத்ரி பேசியதாவது:


இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. எந்த படிப்பு படித்தாலும் அதுதொடர்பாக கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் தேடுதலை அதிகரித்தால் உங்களால் எதுவும் முடியும். கூடுதல் திறமைகளை வளர்ப்பதற்கு தற்போது ஆன்லைனில் ஏராளமான கோர்ஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன.

Latest Tamil News
இயற்பியல், வேதியியல், கணிதம் படித்தால் பி.எட்., படித்துவிட்டு ஆசிரியர் பணிக்கு தான் செல்ல வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. அதை தாண்டி இஸ்ரோ, அறிவியல் ஆய்வகப் பணிகள், உணவு சோதனை பாதுகாப்பு துறை உள்ளிட்ட துறைகளிலும் ஜொலிக்க முடியும். பயோ டெக்னாலஜிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கோடிக் கணக்கில் வருவாய் கொட்டும் மீன்வளம் சார்ந்து பி.எப்.எஸ்சி., பி.டெக்., பிஷரீஸ் இன்ஜி., உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம்.


வேளாண் படிப்புகள், கிளினிக்கல் சைக்காலஜி, கவுன்சிலிங் சைக்காலஜி போன்ற பிரத்யேக படிப்புகளிலும் ஆர்வம் காட்டலாம். உணவு, ஆடை தொழில்கள் கொடிகட்டி பறக்கின்றன. இரண்டும் பெரிய வளர்ச்சி பெற்று வருகின்றன. இதுதொடர்பாக ஓட்டல் மேனேஜ்மென்ட் பேஷன் டிசைன்ஸ் படிப்புகளை நம்பி படிக்கலாம். கணிதம் படித்தவர்கள் சி.ஏ.,வில் அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். கிரிமினாலஜி, சோஷியல்சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகள் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது 90 சதவீதம் மாணவர்கள் ஸ்மார்ட் அலைபேசி வைத்துள்ளனர். இதில் 16 சதவீதம் பேர் மட்டுமே படிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். இந்நிலை மாற வேண்டும். எல்லோருக்கும் லட்சியம் இருக்க வேண்டும். பிடித்த படிப்புகளை தேர்வு செய்யுங்கள்.

சேப்டி ஆபீசர்கள் தேவை அதிகரிப்பு



'பாதுகாப்பு களத்தில் வாய்ப்புகள்' தொடர்பாக மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் விவேக் ராம்குமார் பேசியதாவது:


நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் ஏதாவது ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவையே. நிறுவனங்களில் தீ விபத்துகள் நடக்காமல் தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் தீத் தடுப்பு உபகரணங்கள் வசதியுடன் சேப்டி அதிகாரிகள் நியமிக்க வேண்டும். இதற்காக தீ மற்றும் தொழிலக பாதுகாப்பு துறை படிப்புகள் உள்ளன. பி.எஸ்சி., பயர் அன்ட் இண்டஸ்ட்டிரியல் சேப்டி, எம்.இ., இண்டஸ்ட்டிரியல் சேப்டி, பி.ஜி. டிப்ளமோ படிப்புகள் உள்ளன. கட்டுமான துறைகளுக்கு சேப்டி அதிகாரிகள் பணியிடங்கள் தேவை அதிகரித்துள்ளன. துபாய் உள்ளிட்ட வெளி நாடுகளில் இப்படிப்பு முடித்தோருக்கு ரூ.பல லட்சம் சம்பளத்தில் வேலை கிடைக்கின்றன. பி.ஜி., முடித்து வெளியே வரும் நோட்டிபைடு சேப்டி ஆபீசர்ஸ் பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை சம்பளம் கிடைக்கிறது. இப்படிப்புக்கு கட்டமைப்பு உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும். பாடத் திட்டங்கள் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை பார்க்க வேண்டும். தன்னாட்சி கல்லுாரிகளை தேர்வு செய்வது நல்லது. இப்படிப்புக்கு நீச்சல் தெரிந்திருப்பது அவசியம். தேவையான உடல்தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

ஏராளமாக இருக்கு மருத்துவசார் படிப்புகள்



உடல் நல அறிவியல் பாராமெடிக்கல் தொடர்பாக டாக்டர் சிவகுமார் பேசியதாவது:

பிளஸ் 2 வுக்கு பின் உயர்கல்வி தேர்வு செய்வது என்பது வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவு. அதை பெற்றோருடன் சேர்ந்து எடுக்க வேண்டும். ஒரு காலத்தில் மருத்துவம் என்பது சிறிய மருத்துவமனையாக இருந்தது. ஆனால் தற்போது ஒரு குழுவாக தொழில்நுட்ப வசதிகளுடன் கூடியதாக மாறிவிட்டது. மருத்துவம் சார்ந்த துறைகளும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் என்றும் வேலை வாய்ப்பு அளிக்கும் பி.பார்ம்., பார்ம் பி., படிக்கலாம். தற்போது பெண்களுக்கான பிரத்யேக மருத்துவமனைகள் வந்து விட்டன. இதனால் மருத்துவம்சார் படிப்பு முடித்தோருக்கு இன்னும் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆண் நர்ஸ்களுக்கு அதிக தேவை உள்ளன. வெளிநாடுகளில் நர்சாக பணியாற்ற விரும்பினால் ஆங்கில புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.


தற்போது யூராலஜி, கிரிட்டிக்கல் கேர் என 20க்கும் மேற்பட்ட துறைகளில் பிரத்யேக பிரிவுகள் உருவாகிவிட்டன. இப்படிப்புகளுடன் தேவையான ஏ.ஐ., தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்ள வேண்டும். பி.ஓ.டி., ஆகுபேஷனல் தெரபி முடித்தால் வெளிநாடுகளில் ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதுதவிர ரேடியோகிராபி, ரேடியோ தெரபி, கார்டியோபல் கிரிட்டிக்கல் கேர் பிசிஷியன் அசிஸ்டெண்ட், பி.ஆப்தோமெட்ரி. கிளினிக்கல் சைக்காலஜி, மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ், ஆடியோலஜி அன்ட் ஸ்பீச் லாங்குவேஜ் டெக்., டயாலிசிஸ் டெக்., நீரோ எலக்ட்ரோ பிஸியாலஜி, ஹெல்த் கேர் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம்.

வரவேற்பு அதிகரிக்கும்



'இந்திய மருத்துவம்' குறித்து ஆயுர்வேத டாக்டர் நிம்மி பேசியதாவது:



ஆயுர் வேதம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தே உள்ள ஒரு பாரம்பரிய மருத்துவ முறை. இதன் அருமை தெரிந்து தான் ஆயுஷ் அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில் யோகா, நேச்சுரோபதி, சித்தா, ஓமியோபதி இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.



இதற்காக பி.ஏ.எம்.எஸ்., படிக்க வேண்டும். பிளஸ் 2வில் நீட் தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐந்தரை ஆண்டுகள் படிப்பு.ஒவ்வொரு மூலிகையும் எந்த நோய்க்கு பயன்படும். எந்த நோய்க்கு எந்த மூலிகையை சேர்க்க கூடாது போன்றவை கற்பிக்கப்படும். லேகியம் தயாரிப்பு குறித்தும் கற்பிக்கப்படும். கடைசி ஒன்றரையாண்டுகள் நோய்கள் பற்றியும், சிகிச்சை அளிப்பது பற்றியும் கற்றுத்தரப்படும். இதற்கான கல்லுாரிகள் கேரளாவில் அதிகம் உள்ளன.


ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இதன் வளர்ச்சி அதிகரித்துள்ளன. ஆயுஷ் ஆராய்ச்சி மையம் மதுரையில் அமையப்போகிறது. அது அமைந்தவுடன் இப்படிப்புகளுக்கு இன்னும் வரவேற்பு அதிகரிக்கும். தமிழகத்தில் நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத கல்லுாரி உள்ளது. இந்திய மருத்துவ படிப்பு முடித்தால் சொந்தமாக மருத்துவமனை துவக்கலாம், மெடிக்கல் சென்டர் வைக்கலாம்.


மெடிக்கல் ஆபீசர், மருந்து ஆய்வாளராக பணியாற்றலாம். ஆராய்ச்சி துறையிலும் ஹெல்த் கேர் துறையிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. நட்சத்திர ஓட்டல்களில் 'ஸ்பா' போன்றவற்றில் இப்படிப்பு முடித்தோர் தேவையாக உள்ளனர். ஆங்கில மருத்துவத்துக்கு இணையாக ஸ்பெஷல் டாக்டர்கள் இதிலும் பணியாற்றுகின்றனர்.

Advertisement