விருதை பஸ் நிலையத்தில் கட்டட கழிவுகள் அகற்றப்படுமா: சமூக விரோத கும்பலால் மக்கள் அச்சம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பஸ் நிலையம் மற்றும் கடலுார் சாலையில் குவிந்து கிடக்கும் கட்டட கழிவுகளை அகற்ற அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, பெங்களூரு, திருப்பதி உட்பட பிற மாநிலங்களுக்கும், சென்னை உட்பட பல்வேறு பெரு நகரங்களுக்கும் பஸ் வசதி உள்ளது. விருத்தாசலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை 1, 2ல் இருந்து குக்கிராமங்களுக்கும், பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கல்வி, மருத்துவம், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இருப்பினும் பஸ் நிலையத்தில் குடிநீர், கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தன்னிறைவாக இல்லை.

பஸ் நிலைய வளாகத்தையொட்டி, தனியார் மருத்துவமனை, குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வந்தன. அதில், ராட்சத வடிகால் செல்லும் நீர்நிலை புறம்போக்கில் இருந்த ஆக்கிரமிப்புகள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இடித்து அகற்றப்பட்டன.

தற்போது, அந்த பகுதி முழுதும் கட்டட கழிவுகள் மலைபோல் குவிந்து, பயன்பாடின்றி சுகாதார சீர்கேடாக மாறியுள்ளது. இவ்வழியாக, ஆலடி சாலையில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு பொதுமக்கள் இவ்வழியாக சென்று வருகின்றனர். ஆனால், பஸ் நிலையம் வெளியே உள்ள டாஸ்மாக் கடைகள், தனியார் பாரில் இருந்து மதுவாங்கி வரும் பயணிகள், சமூக விரோதிகள் குவிந்து கிடக்கும் கட்டட கழிவுகளின் மறைவிடத்தில் அமர்ந்து மது அருந்தி விட்டு, போதை தலைக்கேறிய நிலையில், சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனை தட்டிக்கேட்கும் நபர்களை தாக்குவது, ஆபாசமாக திட்டுவதும் தொடர்கிறது. இதனால் பயணிகள், பெண்கள் இவ்வழியை தவிர்த்து 1 கி.மீ., துாரம் சுற்றிக் கொண்டு, பாலக்கரை வழியாகவும், வி.என்.ஆர்., சாலை வழியாகவும் சுற்றிக் கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, பஸ் நிலையம் அருகே சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ள கட்டட கழிவுகளை அகற்றி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏரி துார்வாரப்படுமா



விருதை பஸ் நிலையத்தையொட்டி ஆக்கிரமிப்பு அகற்றியது போல் கடலுார் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரில் ஏரியை ஆக்கிரமித்திருந்த 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்களை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர்.

ஆனால், கட்டட கழிவுகளை அகற்றி, அப்பகுதியை துார்வாரி மீண்டும் ஏரியாக மாற்றாமல் கம்பிவேலி மட்டும் அமைத்தனர். இதனால் அப்பகுதி டிஜிட்டல் விளம்பர பேனர் கட்டும் வளாகமாக மாறியுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதியை துார்வாரி, ஏரியாக மாற்றினால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

ஏரியை துார்வார விருத்தாசலம் தாலுகா அலவலகத்தில் இருந்து முறையாக கோப்புகள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொது நிதியில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதியில் நீர்நிலைகளை மீண்டும் உருவாக்க வேண்டும். ஆனால், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்பதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement