கட்டுமான பணிகளுக்கான தகவல் புத்தகங்கள் வெளியீடு

சென்னை : பொதுப்பணி துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, எட்டு தொகுதிகள் கொண்ட, கட்டுமான பணிகளுக்கான தகவல் விபர புத்தகங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

கடந்த 1984ம் ஆண்டு, பொதுப்பணி துறை கட்டுமானப் பணிகளுக்கான விபர புத்தகம் திருத்தி அமைக்கப்பட்டு, இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. தற்போது பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் நவீன கட்டுமான முறைகள் வழியே, கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த மாற்றங்களை, கட்டுமான பணிகளுக்கான தரவு விபரங்கள் வழியே, மதிப்பீட்டு தொகையை, ஒரே மாதிரியாக அனைத்து பொறியியல் கட்டுமானத் துறைகளிலும் மேற்கொள்ளும் வகையில், புதிய தகவல் விபர புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பொதுப்பணி துறைக்கு, ஹிந்து சமய அறநிலைய துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கட்டுமானப் பணிகளுக்காக, எட்டு தொகுதிகள் அடங்கிய, தரவு விபர புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவை கட்டுமானப் பொறியியல் துறைகள் அனைத்தும், எளிதான முறையில் மதிப்பீடு தயாரிக்க, பெரிதும் பயன்படும்.

Advertisement