'தெற்கு மண்டல வார்டு மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்'

கோவை : 'துாய்மை பாரதம் 2.0' திட்டத்தில், கோவைப்புதுார், பீளமேடு, கவுண்டம்பாளையம் பகுதியில், தலா ரூ.3 கோடியில் குப்பை மாற்று நிலையம் கட்டப்படுகிறது. கவுண்டம்பாளையம் பகுதியில் அமைக்க, 45வது வார்டு கவுன்சிலர் பேபி சுதா, கடுமையாக ஆட்சேபித்தார்.

அவர் பேசுகையில், ''குப்பை கொட்டும் மையத்தை, கவுண்டம்பாளையத்தில் அமைத்தால், சுற்றுப்பகுதியை சேர்ந்த ஐந்து வார்டு மக்கள், கடுமையாக பாதிக்கப்படுவர். இதுதொடர்பாக பலமுறை பேசியுள்ளேன். முடிவுகளை மேயர் தன்னிச்சையாக எடுக்கிறீர்கள். கவுன்சிலர்கள், அதிகாரிகள் வரும்போது, மேயரும் அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும். தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும்,'' என்றார்.

தி.மு.க., கவுன்சிலர் உதயகுமார் பேசுகையில், ''தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 20 வார்டு மக்கள், வெள்ளலுார் குப்பை பிரச்னையால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். 100 வார்டு குப்பையை அங்கு கொட்டுகிறீர்கள். 30 ஆண்டுகளாக குப்பை கொட்டப்பட்டிருக்கிறது. 10 கி.மீ., சுற்றளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. ஆறு மாதத்துக்குள் குப்பை பிரச்னையை தீர்க்க வேண்டும்,'' என்றார்.

ஆளுங்கட்சி கவுன்சில் குழு தலைவர் கார்த்திகேயன் பேசுகையில், ''வெயில் காலமாக இருப்பதால், காற்றோட்டத்துக்காக மக்கள் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருக்கின்றனர். துர்நாற்றம் வீசுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. கிருமிநாசினி தெளிக்க வேண்டும்,'' என்றார்.

கவுன்சிலர்களின் எதிர்ப்பை மீறி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுண்டம்பாளையத்தில் குப்பை மாற்று மையம் அமையும் இடத்தை, நேரில் பார்வையிடுவது என முடிவெடுக்கப்பட்டது.



'சேவை சரியில்லை அபராதம் விதிக்கணும்'

மா.கம்யூ., கவுன்சில் குழு தலைவர் ராமமூர்த்தி பேசுகையில், ''வீடு, வீடாகச் சென்று குப்பை சேகரிக்க நடவடிக்கை எடுத்துள்ள நேரத்தில், ரோட்டில் கிடக்கும் குப்பை எடுக்க தவறி வருகிறோம். சாக்கடை கால்வாய்களை துார்வார வேண்டும்; அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். அதற்கான வாகனங்கள் தேவை,'' என்றார்.காங்கிரஸ் கட்சி கவுன்சில் குழு தலைவர் அழகு ஜெயபாலன் பேசுகையில், ''தனியார் நிறுவனத்தினர் சரியாக சேவை செய்யாவிட்டால் அபராதம் விதிக்க வேண்டும். எவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும் என்பதை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.கம்யூ., கவுன்சிலர் மோகன் கூறுகையில், ''53, 54 மற்றும், 60வது வார்டுகளில் பயன்படுத்த பேட்டரி வாகனங்கள் காணாமல் போய் விட்டன. அதை கண்டுபிடிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement