ஆற்றல் தணிக்கை திட்டத்தில் 3.50 லட்சம் யூனிட்டுகள்  சேமிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஆற்றல் தணிக்கை திட்டத்தில் 8 நிறுவனங்கள்மாத சராசரியாக 3.50 லட்சம் யூனிட்டுகள் மின்னாற்றலை சேமிப்பதால் மொத்த மின் நுகர்வில் 12 சதவீதம் வரை பயனீடு குறைக்கப்பட்டுள்ளது.

ஆற்றல் தணிக்கை, சேமிப்பு ஊக்குவிப்பு திட்டம் என்பது தமிழக அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஒரு திட்டமாகும். இது ஆற்றல் பயனீட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும், உற்பத்தி செலவினங்களைக் குறைப்பதற்கும், உலக சந்தையில் போட்டிதிறனை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

ஆற்றல் தணிக்கை செய்ய ஆகும் செலவில் 75 சதவீதம், அதன் பரிந்துரையின் அடிப்படையில் ஆற்றல் செயல் திறனை மேம்படுத்தும் நோக்கத்திற்காக பெறப்பட்ட இயந்திரங்கள், உபகரணங்கள், தொழில்நுட்பம் இவற்றுக்கான செலவில் 50 சதவீதம் அரசால் திருப்பித் தரப்படுகிறது. இது குறித்து குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆற்றல் சேமிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் 2024-25ம் ஆண்டு ஆற்றல்தணிக்கை செயல்படுத்துதல் திட்டத்தின் கீழ் 8 நிறுவனங்கள் வெற்றிகரமாக சராசரியாக மாதத்திற்கு 3 லட்சத்து 50 ஆயிரத்து 090 யூனிட்டுகள் வரை மின்னாற்றலை சேமித்து வருகின்றன. இதனால் மொத்த மின் நுகர்வில் ஏறக்குறைய 12 சதவீதம் வரை பயனீடு குறைக்கப்பட்டுள்ளது.

இதற்காக மானியத்தொகையாக ரூ.51.63 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. 26 நிறுவனங்களுக்கு ஆற்றல் தணிக்கை ஆடிட் முடிந்துள்ளது. இந்நிறுவனங்கள் விரைவில் செயல்படுத்துதல் திட்டத்திற்கு கொண்டு செல்லப்படும்.

Advertisement