சித்த மருத்துவக் கல்லுாரி தொடங்குவது எப்போது? எதிர்பார்ப்பில் புதுச்சேரி மக்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய அரசின் ஜிப்மர், மாநில அரசு மருத்துவக்கல்லுாரி உட்பட 9 மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. கொரோனா தொற்று உலகையே உலுக்கிய நேரத்தில், அலோபதி மருத்துவத்தைவிட பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஓமியோபதி மீது மக்களின் பார்வை அதிகமானது. சித்த மருத்துவத்தில் நோய்க்கான மூல காரணத்தை ஆராய்ந்து சிகிச்சை அளித்து நிரந்தர தீர்வு காணப்படும்.

புதுச்சேரியின் மாகி பகுதியில் ஆயுர்வேத கல்லுாரி உள்ளது. இருப்பினும் புதுச்சேரியில் சித்த மருத்துவக் கல்லுாரி தொடங்க வேண்டும் என்பது பாரம்பரிய முறை மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கை கொரோனா தொற்றுக்கு பிறகு வலுத்தது.

இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி, சட்டசபையில் 2023ல் வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரி கோரிமேட்டில் இ.எஸ்.ஐ. மாதிரி மருத்துவமனை அமைக்க அரசு பரிசீலிக்கிறது. அந்த வளாகத்தில் ரூ.50 கோடியில் 5 ஏக்கரில் 100 படுக்கைகளுடன் கொண்ட சித்த மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் சித்த மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் வேகமெடுத்தன. புதுச்சேரி கோரிமேடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி வளாகத்தில் 5 ஏக்கர் நிலத்தை சித்த மருத்துவக் கல்லுாரிக்கு ஒதுக்குவது. அங்கு 100 படுக்கை கொண்ட மருத்துவமனை கட்டுவது, சித்த மருத்துவத்துடன் பஞ்சர்மா, பிசியோதெரபி சிகிச்சைகளையும் இணைந்து செயல்படுத்துவது என திட்டமிடப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

அதில், இந்துஸ்தான் ஸ்டீல்வொர்க்ஸ் என்ற கட்டுமான நிறுவனம், குறைந்த ஏலத்தில் பணிகளை மேற்கொள்ள முன்வந்தது. இந்த நிறுவனம் மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் மினிரத்னா விருது பெற்ற பொதுத்துறை நிறுவனம். 55 ஆண்டுகால அனுபவத்துடன் 13 மண்டல அலுவலகம், 33 கிளை அலுவலகத்துடன் இயங்கி வரும் இந்த நிறுவனம் சித்த மருத்துவக் கல்லுாரி கட்டுமானத்துக்கு விரிவான திட்ட அறிக்கையை புதுச்சேரி அரசிடம் சமர்பித்தது.

அதில், தேவையான நிலப்பரப்பு, கட்டட வரைபடங்கள், மண் ஆய்வு அறிக்கை, கட்டடங்களின் தளங்களின் அமைப்பு, ஆரம்ப கட்ட மதிப்பீடுகள் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பரிசீலித்த புதுச்சேரி அமைச்சரவை சில மாற்றங்களை பரிந்துரை செய்தது.

இந்த மாற்றங்களுடன் முழுமையான புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்பிக்கப்பட்டது.

ஆனால், கொரோனாவின் தாக்கம் குறைந்ததுபோலவே, சித்த மருத்துவக் கல்லுாரி கட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் தாக்கமும் புதுச்சேரி அரசிடம் படிப்படியாக குறைந்துபோனது. சித்த மருத்துவ கல்லுாரிக்காக ஒதுக்கப்பட்ட நிலம், வருவாய்த் துறையிடமிருந்து ஆயுஷ் இயக்குனரகத்துக்கு மாற்றப்படவில்லை. இதனால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வாழும் சித்தர் என ரங்கசாமியை அவரது தொண்டர்கள் அழைக்கின்றனர். இதற்கு காரணம் முதல்வர் ரங்கசாமியின் பேச்சுதான். அரசு விழாக்களில் முதல்வர் ரங்கசாமி, ''புதுச்சேரி பல சித்தர்கள் வாழ்ந்த ஆன்மீக பூமி, புண்ணிய பூமி. அவர்கள் பல மருத்துவ குறிப்புகளை புதுச்சேரிக்கு விட்டு சென்றுள்ளனர். புதுச்சேரியில் கிடைக்காத மருத்துவ வசதிகளே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். இந்தியாவிலேயே சுகாதாரத்தில் புதுச்சேரி முதலிடம் பெற வேண்டும். புதுச்சேரியை மருத்துவ கேந்திரமாக, மருத்துவ சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும். மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்'' என்று அடிக்கடி பேசி வருகிறார். மேலும், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீடாக 10 சதவீதம் வழங்கியுள்ளார்.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தபடி சித்த மருத்துவக் கல்லுாரி தொடங்கினால் மொத்தம் 150 அரசு மருத்துவ இடங்கள் கிடைக்கும். மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 50 கோடி நிதியும் கிடைக்கும். முதல்வர் ரங்கசாமி மத்திய பாஜ அரசை வலியுறுத்தினால், சித்த மருத்துவக் கல்லுாரிக்கு தேவையான முழு நிதியும் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

இதை பயன்படுத்தி, சித்தர்களின் மீது அளவில்லாத பற்று கொண்ட, முதல்வர் ரங்கசாமி சித்த மருத்துவ கல்லுாரியை புதுச்சேரியில் உடனடியாக தொடங்க வேண்டும் என்பதே புதுச்சேரி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement