கத்தரிக்காய் கிலோ ரூ.3 ; செடிகள் உழுது அழிப்பு

கூடலுார்; தேனி மாவட்டம் கூடலுாரில் கத்தரிக்காய் விலை மிக குறைவாக கிலோ ரூ.3க்கு வியாபாரிகள் வாங்குவதால் விவசாயிகள் அறுவடை செய்யாமல் செடிகளிலேயே விட்டுள்ளதுடன் உழுது அழித்தனர்.

கூடலுாரில் கழுதைமேடு, கொங்குச்சிபாறை, பெருமாள் கோயில், 18ம் கால்வாய், பளியன்குடி, காஞ்சிமரத்துறை உள்ளிட்ட பகுதிகளில் கத்தரிக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அறுவடை செய்யும் பருவத்தில் உள்ளது. ஆனால் கத்திரிக்காய் விலை மிகக்குறைவாக இருப்பதால் விவசாயிகள் அறுவடை செய்யாமலேயே செடிகளை உழுது அழித்து வருகின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது: கத்தரிக்காய் கூடலுார் மார்க்கெட்டில் கிலோவுக்கு ரூ.3 க்கு வாங்குகின்றனர். மிகக் குறைவான இந்த விலையால் அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்காது. பராமரிப்பு பணிகளுக்காக ரூ.பல லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டுள்ளது.

மிகக்குறைந்த விலையால் காய்பறிப்பு கூலி கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மாற்று பயிர் நடவு செய்வதற்கு கத்தரிக்காய் செடிகள் உழுது அழிக்கப்படுகிறது. காய்கறிகள் விலையை அரசு நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என்றனர்.

Advertisement