ரூ.76 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே முந்திரி கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து ரூ. 76 லட்சம் மோசடி செய்த மேலாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

காடாம்புலியூர், கீழக்குப்பம் சாலையை சேர்ந்தவர் பாண்டுரங்கன்,51; இவர் அதேபகுதியில் நடத்தி வரும் முந்திரி கம்பெனியில், வானுார் அடுத்த உப்புவேலுார் டி.புறங்கனியை சேர்ந்த வேணுகோபால் மகன் வசந்தராஜ் மேலாளராக பணிபுரிந்தார்.

கடந்தாண்டு வங்கி கணக்கு விவரங்களை பாண்டுரங்கன் சரிபாரத்த போது, வங்கி மூலமாக 67 லட்சத்து 83 ஆயிரத்து 750 ரூபாயும், ஜிபே மூலமாக 47 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரொக்கமாக 15 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 750 ரூபாயை வசந்தராஜ் கையாடல் செய்தது தெரியவந்தது. பணத்தை திருப்பிக் கேட்ட போது, அவர் 39 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கினார். மீதமுள்ள 76 லட்சத்து 22 ஆயிரத்து 750 ரூபாயை தராமல் கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து பாண்டுரங்கன் அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து, வசந்தராஜ், அவரது தந்தை வேணுகோபால், தாய் குணவதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement