டில்லியில் யாரை சந்தித்தார் செங்கோட்டையன்?

24

சென்னை: தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவாகும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், அ.தி.மு.க., மூத்த தலைவர் செங்கோட்டையன், டில்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்ததாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்.,க்கும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டைன் இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு எழுந்ததாக தகவல் வெளியானது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்காத செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு, பிரச்னை முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டன.

இச்சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக அ.தி.மு.க., - பா.ஜ., இடையே மீண்டும் கூட்டணி உருவாகக்கூடும் என தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லி சென்ற இ.பி.எஸ்., மத்தி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது என தகவல்கள் வந்தன. ஆனால், தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து பேசப்பட்டதாக மட்டும் இ.பி.எஸ்., விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் டில்லி சென்று அமித்ஷா, நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை வழியாக ரகசியமாக டில்லி சென்ற செங்கோட்டையன், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக செங்கோட்டையன் தரப்பிலோ, மத்திய அமைச்சர்கள் தரப்பிலோ, எந்தவிதமான அறிவிப்போ, படமோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement