மகிழ்ச்சி: திண்டிவனம் மார்க்கெட் கமிட்டியில் தாமதின்றி பணம் பட்டுவாடா

திண்டிவனம்:திண்டிவனம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் வழங்கிய விளை பொருட்களுக்கு கால தாமதம் இன்றி பணம் பட்டுவாடா செய்து வருவது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி, வளத்தி, அவலுார்பேட்டை, அரகண்டநல்லுார் ஆகிய இடங்களில் மார்க்கெட் கமிட்டி உள்ளது. திண்டிவனம் கமிட்டிக்கு உளுந்து, வேர்க்கடலை, நெல், எள், விக்கிரவாண்டியில் பனிப்பயறு, செஞ்சியில் நெல் அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது.

அனைத்து மார்க்கெட் கமிட்டிகளும், மத்திய அரசின் நேரடி கொள்முதல் திட்டமான தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ நாம்) அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விவசாய உற்பத்தி பொருட்களுக்கு, எங்கு அதிக விலை கிடைக்கிறதோ, அங்கு விற்பனை செய்ய முடியும். நாடு முழுதும் உள்ள மார்க்கெட் கமிட்டிகள் இணையதளத்தில் இணைக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் விளைபொருட்களுக்கு பரிவர்த்தனை நடந்த 2 நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணம் பட்டுவாடா செய்த மூட்டைகள் மட்டும் டெலிவரி செய்யப்படும் என மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அறிவித்து இருந்தாலும் மாவட்டத்திலுள்ள பல மார்க்கெட் கமிட்டிகளில் பணம் பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.

பணம் பட்டுவாடா செய்ய கோரி செஞ்சி, விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் என பல இடங்களில் சாலை மறியல் செய்வது வாடிக்கையாக நடந்து வந்தது.

தற்போது திண்டிவனம் மார்க்கெட் கமிட்டி இதில் விதி விலக்காக, மத்திய அரசின் இ-நாம் திட்டத்தை முறையாக அமல்படுத்துவதில் முன்னிலையில் உள்ளது.

இந்த கமிட்டிக்கு புதிதாக பொறுப்பேற்ற சரவணன், மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் விவசாயிகள் மார்க்கெட் கமிட்டிக்கு பொருட்கள் கொடுத்த 3 நாட்களுக்குள், வியாபாரியிடம் பணம் பெற்று விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

பணம் கொடுப்பதில் தாமதம் செய்தால் முதல் முறை எச்சரிக்கை விடப்பட்டும். தொடர்ந்து தாமதம் செய்தால் குறிப்பிட்ட வியாபாரி, இணைய தளம் மூலம் ஏலம் கேட்கமுடியாத படி பெயர் பிளாக் செய்யப்படுகிறது.

வியாபாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து, விளை பொருட்களுக்கான பணம் குறித்த காலத்திற்குள் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வியாபாரிகள் சிலர் சிண்டிகேட் அமைத்து கமிட்டி கண்காணிப்பாளருக்கு அரசியல்வாதிகள் மூலம் நெருக்கடி கொடுத்து வந்தாலும், விவசாயிகள் மத்தியில் ஆதரவு உள்ளது.

Advertisement