குல்வீர் சிங் தேசிய சாதனை: 10,000 மீ., ஓட்டத்தில் அசத்தல்

புதுடில்லி: இந்தியாவின் குல்வீர் சிங் (10,000 மீ., ஓட்டம்), தேசிய சாதனையை முறியடித்தார்.

அமெரிக்காவில் நடந்த தடகள போட்டிக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் 26, பங்கேற்றார். பந்தய துாரத்தை 27 நிமிடம், 00.22 வினாடியில் கடந்த இவர், 6வது இடம் பிடித்தார். தவிர இவர், 10,000 மீ., ஓட்டத்தில் தனது சொந்த தேசிய சாதனையை 2வது முறையாக முறியடித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த போட்டியில் இலக்கை 27 நிமிடம், 41.81 வினாடியில் அடைந்து முதன்முறையாக தேசிய சாதனை படைத்த குல்வீர் சிங், நவம்பரில் ஜப்பானில் நடந்த போட்டியில் இலக்கை 27 நிமிடம், 14.88 வினாடியில் அடைந்து தனது தேசிய சாதனையை முறியடித்தார்.
உ.பி.,யை சேர்ந்த குல்வீர் சிங், 5,000 மீ., ஓட்டத்திலும் (13 நிமிடம், 11.82 வினாடி) தேசிய சாதனை படைத்துள்ளார்.


10,000 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் கார்த்திக் குமார் (28 நிமிடம், 11.34 வினாடி) 8வது இடம் பிடித்தார். ஆண்களுக்கான 1,500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ராகுல் (3 நிமிடம், 41.10 வினாடி) 8வது இடத்தை கைப்பற்றினார்.

பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் சீமா (32 நிமிடம், 14.66 வினாடி) 19வது இடம் பிடித்தார். இந்திய வீராங்கனை அன்கிதா, 1,500 மீ., ஓட்டத்தில் (4 நிமிடம், 13.97 வினாடி) 3வது இடத்தை தட்டிச் சென்றார்.

Advertisement