ஆத்திரமூட்டும் முகமது யூனுஸ் அறிக்கை: தலைவர்கள் கண்டனம்

புதுடில்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கக்கடலை அணுகுவதற்கான பாதுகாவலராக வங்கதேசம் விளங்குவதாக, அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியுள்ளதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள வங்கதேசம் சீனாவின் கடன்களை அடைக்க முடியாமல் திணறுகிறது. இந்நிலையில், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை, முகமது யூனுஷ் சமீபத்தில் சந்தித்தார். அப்போது, இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டு உள்ளன. அவை வங்கக்கடலை அணுகுவதற்கு வழியே இல்லை. எனவே, இந்த பகுதிகள் வங்கக்கடலை அணுகுவதற்கான பாதுகாவலனாக வங்கதேசம் உள்ளது. அதனால், வங்கதேசத்தில், சீனா அதிக முதலீடுகளை செய்து, உற்பத்தி சந்தைப்படுத்துதலை அதிகரித்தால், நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் என அவர் கூறினார். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்திய தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; வடகிழக்கு மாநிலங்கள் குறித்த முகமது யூனுஸ் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தக் கருத்து, இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடத்துடன் தொடர்புடையது. வடகிழக்கை பிரதான நிலப்பகுதியில் இருந்து தனிமைப்படுத்த இந்த முக்கியமான பாதையைத் துண்டிக்க பரிந்துரைப்பதாக உள்ளது. எனவே, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடத்தின் அடியிலும் அதை சுற்றியும் மிகவும் வலுவான ரயில் மற்றும் சாலை இணைப்புகளை உருவாக்குவது முக்கியம் ஆகும். முகமது யூனுஸின் இத்தகைய ஆத்திரமூட்டும் அறிக்கைகளை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் அவை ஆழமான மற்றும் நீண்டகால நிகழ்ச்சி நிரல்களை பிரதிபலிக்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா வெளியிட்ட அறிக்கையில்,'' இந்தியாவை சுற்றி வளைக்க சீனாவை வங்கதேசம் அழைக்கிறது. வங்கதேச அரசின் இந்த அணுகுமுறை நமது வடகிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தானது. மணிப்பூரை பற்றி அரசு கவலைப்படவில்லை. சீனா ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் குடியேறி உள்ளது. நமது வெளியுறவுக் கொள்கை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளதால், இந்தியாவிற்கு ஆதரவான நாடு இன்று நமக்கு எதிராக அணிதிரட்டுவதில் ஈடுபட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.












மேலும்
-
ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்ஸிகளுக்கு தடை; கர்நாடகா ஐகோர்ட் அதிரடி
-
ஐ.எஸ்.எல்., கால்பந்து: பெங்களூரு அணி வெற்றி
-
இந்தியா-தென் ஆப்ரிக்கா மோதல்: அட்டவணை வெளியீடு
-
இலக்கை நோக்கி முன்னேறும் குஜராத்; சாய் சுதர்சன், பட்லர் சிறப்பான ஆட்டம்
-
வருண் 'நம்பர்-3': ஐ.சி.சி., தரவரிசையில்
-
கோவா கேப்டன் ஜெய்ஸ்வால்: மும்பையில் இருந்து விலகல்