டில்லியில் நான்கு மாடி வணிக வளாகத்தில் தீ விபத்து: கார்கள் எரிந்து நாசம்

புதுடில்லி: டில்லியின் முண்ட்கா பகுதியில் உள்ள நான்கு மாடி வணிக வளாகத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல வாகனங்கள் எரிந்து நாசமாகின.


டில்லியின் முண்ட்கா பகுதியில் உள்ள பல மாடி வணிக வளாகம் அமைந்துள்ளது. ஏராளமான கடைகள் அமைந்துள்ள இந்த வளாகத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த வளாகத்தில் அமைந்துள்ள கடை ஒன்றில் பரவிய தீ, அக்கம் பக்கத்தில் இருந்த கடைகள் ஷோரூம்களில் பரவியது.

இதில் பல வாகனங்கள் எரிந்து நாசமாகின, கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பீதியில் ஓடினர். ராஜேந்திர பார்க்கில் உள்ள இந்த சந்தைப் பகுதியில், தீ விரைவாக பரவியதால் பல கார்கள் மற்றும் கடைகள் பாதிக்கப்பட்டன.

சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஷிவ் ஹரி மீனா கூறியதாவது:

நாங்கள் தீயணைப்பு வீரர்களுடன் வந்து சில நிமிடங்களில் தீயை அணைத்தோம். மக்கள் வெளியேற்றப்பட்டனர், மேலும் கரும்புகையால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த தீ விபத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். உயிரிழப்பு எதுவும் இல்லை, ஆனால் பல லட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு ஷிவ் ஹரி மீனா கூறினார்.

Advertisement