சொத்து வரி விதிப்பில் பாரபட்சம்; முதல்வருக்கு வியாபாரிகள் கடிதம்

திருப்பூர்; மாநகராட்சி அலுவலர்கள், பெரிய கட்டடங்களுக்கு சொத்து வரியை குறைத்து மதிப்பிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு விவகாரம் இன்னும் ஓயவில்லை. இதற்கிடையே பெரிய கட்டடங்களுக்கு சொத்து வரி குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாகவம், சொத்து வரிவிதிப்பில் பாரபட்சமான நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை (டாடா) குற்றம்சாட்டியுள்ளது.
கோவையை காட்டிலும்
திருப்பூரில் அதிகம்
இதன் தலைவர் துரைசாமி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
தமிழக அரசு, 10 ஆண்டுகளாக சொத்துவரியை உயர்த்தவில்லை; திருப்பூர் மாநகராட்சியில், 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது; 10 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டங்களுக்கு இந்த வரி உயர்வு சரி; ஆனால், 2020ம் ஆண்டு கட்டிய புதிய கட்டடங்களுக்கும், 100 சதவீத வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கோவையை காட்டிலும் திருப்பூர் மாநகராட்சியில் வரி அதிகம்.
அபராத வரி விதிப்பு ரத்து செய்ய வேண்டும்
ஒரே வீதியில் வரி உயர்வு, வித்தியாசமாக இருக்கிறது. மாநகராட்சி சார்பில், பேக்கரி, ஓட்டல் மற்றும் கடைகளுக்கு, 600 முதல், 1200 ரூபாய் வரை, குப்பை வரி உயர்ந்துள்ளது. தனியார் நிறுவன ஊழியருக்கு சம்பளம் சரிவர வழங்காததால், கடைகள், ஓட்டல்களிலும் கட்டாய வசூல் செய்கின்றனர்.மாநகராட்சி நிர்வாகம், 6 சதவீதம் அபராத வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், பெரிய கட்டடங்களுக்கு சொத்துவரியை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். தனியார் பள்ளி கட்டடங்களுக்கும் மிக குறைந்த வரி விதித்துள்ளனர்.
குடிநீர் இணைப்புகள் துண்டிப்பதாக மிரட்டல்
கட்டடங்களுக்கு நியாயமான வரிவிதிப்பு செய்து, முழுமையாக வசூலித்தாலே போதும், வரி உயர்வை ரத்து செய்யலாம். சொத்து வரி உயர்வு பிரச்னையால், மறு உத்தரவு வரும் வரை வரிவசூல் நடக்காது என்றனர். ஆனால், குடிநீர் இணைப்பை துண்டிப்போம் என்று மிரட்டி, வரிவசூல் நடந்து வருகிறது. மறு உத்தரவு வரும்வரை, வரிவசூலை நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.*
திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கப்பேரவை சார்பில், மாநகராட்சியின், 60 வார்டு கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'பல்வேறு போராட்டம் நடத்தியும், சொத்துவரி, குப்பை வரி உயர்வுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மேயர் தலைமையில் ஆலோசித்து, வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சி மக்கள், கவுன்சிலர்களை நம்பியே உள்ளனர். எனவே, கவுன்சிலர்கள் கட்சி வேறுபாட்டை மறந்து, வரி உயர்வை ரத்து செய்யக்கோரி கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும்
-
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவுக்கு கட்டண சலுகை; யார் யாருக்கு பொருந்தும்?
-
இரு ஆசிரியர்கள் மீது பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு: விளக்கம் கேட்டு இணை இயக்குனர் 'நோட்டீஸ்'
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்
-
நான் யோகி; அரசியல் எனது முழு நேர வேலையல்ல: சொல்கிறார் உ.பி., முதல்வர்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது