ஆயுதப்படைகள் அதிகார சட்டம்: மூன்று மாநிலங்களில் நீட்டிப்பு

புதுடில்லி: வன்முறை சம்பவங்களை தடுக்கவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேச மாநிலங்களில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

சோதனை



வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், உள்நாட்டு கலவரம் அவ்வப் போது ஏற்படுவதால், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும், ஏ.எப்.எஸ்.பி.ஏ., எனப்படும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.

இதன்படி, வாரன்ட் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியும்; அனுமதியின்றி சோதனை நடத்த முடியும்; துப்பாக்கிச்சூடு நடத்த முடியும்.

இந்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேச மாநிலங்களில் இச்சட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது:

வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசங்களில் நிலவும் சட்டம் - ஒழுங்கு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் - 1958ன் மூன்றாவது பிரிவுப்படி, கீழ்க்கண்ட பகுதிகளில் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளன.

மணிப்பூரின் ஐந்து மாவட்டங்களில் உள்ள 13 போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர, மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இச்சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாவட்டங்கள்



இதேபோல், நாகாலாந்து மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கும், மற்ற ஐந்து மாவட்டங்களில் உள்ள 21 போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் இச்சட்டம் நீட்டிக்கப்பட்டுஉள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் திராப், சாங்லாங், லாங்டிங் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும், நம்சாய் மாவட்டத்தில் உள்ள மூன்று போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement