ஏ.டி.எம்., கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: ஐந்து தடவைக்கு மேல், ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், 23 ரூபாய் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருப்பது, மக்களிடம் கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. நாடு முழுதும் பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏ.டி.எம்.,மில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை, மே 1 முதல், 23 ரூபாயாக உயர்த்தி வசூலிக்க, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை அப்பட்டமான சுரண்டல்; பணக்காரர்கள் திளைக்க, ஏழைகள் அட்டை தேய்க்க துாண்டுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
மத்திய அரசின் ஊக்கம் காரணமாக ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்திருப்பதாக ஸ்டாலின் நம்புகிறார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
முதலில், அனைவரும் வங்கியில் கணக்கு துவக்குங்கள் என, மத்திய அரசு சொன்னது. பிறகு பண மதிப்பிழப்பு அறிவித்து தவிக்க விட்டது. பிறகு, ஆளே தேவைப்படாத டிஜிட்டல் இந்தியா என்றனர். சில மாதங்களில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கட்டணம் பிடித்தனர்.
கணக்கில் இருப்புத்தொகை குறைவாக உள்ளது என்று சொல்லி, இருப்பு வைக்கக்கூட பணமில்லாத ஏழைகளுக்கு அபராதம் விதித்தனர். தற்போது அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவை தாண்டி, ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், 23 ரூபாய் கட்டணம் பிடிக்க, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதனால், அவ்வப்போதைய தேவைக்கு மட்டும் பணம் எடுத்த மக்கள், இனிமேல் தேவைக்கு மீறி, ஒரேயடியாக தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். அது சீக்கிரம் செலவாகும் என்பதோடு, ஏழைகளுக்கும் வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தையே சிதைத்து விடும்.
ஏற்கனவே மத்திய அரசு நிதி தராததால், சம்பளம் கிடைக்காமல் தவிக்கும், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர் தான், இந்த நடவடிக்கையால் மிக அதிகமான பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
இது, டிஜிட்டல் மயமாக்கம் அல்ல. இது, நிறுவனமயமான சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம்., அட்டையை தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கின்றனர்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதற்கிடையில், 'மத்திய அரசு தன் கஜானாவை நிரப்புவதற்கு, பொதுமக்களின் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கும் வசூல் ஏஜன்ட்களாக வங்கிகளை பயன்படுத்துகிறது' என்று, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் குற்றம் சாட்டியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:
'கட்டுப்பாடற்ற கொள்ளை' என்பதே பா.ஜ.,வின் தாரக மந்திரமாக இருக்கிறது. வங்கிகளில், சேமிப்பு கணக்குகள், ஜன் தன் கணக்குகளில் இருந்து, குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காததாகக் கூறி, 2008 முதல், 2024 வரை, 43,500 கோடி ரூபாயை பறித்துள்ளது.
இது தவிர, செயல்பாடு இல்லாமல் இருப்பதற்காக ஆண்டுதோறும், 100 முதல் 200 ரூபாய்; வங்கி பணப்பரிவர்த்தனை அறிக்கைக்கு 100 ரூபாய்; எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கு காலாண்டுககு ஒருமுறை 25 ரூபாய்; கடன் வழங்குவதற்கு 3 சதவீதம் வரை ப்ராசஸிங் கட்டணம் என, ஒவ்வொன்றுக்கும் பொதுமக்களிடம் இருந்து வங்கிகள் பணம் வசூலிக்கின்றன.
கடனை குறிப்பிட்ட காலத்துக்கு முன் அடைத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
முன்பெல்லாம், இதுபோன்ற கட்டண விபரங்களை பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவிக்கும். இப்போது, அதுபோன்று தெரிவிப்பதில்லை. ஒவ்வொரு சேவைக்கும் மக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படும் சூழ்நிலையில், மே 1 முதல் அமலுக்கு வரும் ஏ.டி.எம்., கட்டண உயர்வு மிகவும் வேதனை தருகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் வசூல் ஏஜன்ட்களாக வங்கிகளை மத்திய அரசு மாற்றி விட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும்
-
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவுக்கு கட்டண சலுகை; யார் யாருக்கு பொருந்தும்?
-
இரு ஆசிரியர்கள் மீது பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு: விளக்கம் கேட்டு இணை இயக்குனர் 'நோட்டீஸ்'
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்
-
நான் யோகி; அரசியல் எனது முழு நேர வேலையல்ல: சொல்கிறார் உ.பி., முதல்வர்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது