ராகுலிடம் புறமுதுகு காட்டி மனு கொடுத்த தலைவர்கள்!

''வாஸ்து பார்த்து சீட்டை மாத்திட்டாருங்க...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.
''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துல, ஆறு மாசத்துக்கு முன்னாடி, பி.டி.ஓ.,வா வந்த சத்யேந்திரனுக்கு பல பிரச்னைகள் வந்துச்சு... 'தலைவர்கள், கவுன்சிலர்களால தான் பிரச்னை... இவங்க பதவிக்காலம் முடிஞ்சதும் எல்லாம் சரியாகிடும்'னு நினைச்சாருங்க...
''கடந்த ஜனவரி 5ல், தலைவர்கள் பதவிக்காலம் முடிஞ்சு, தனி அலுவலரான சத்யேந்திரன் கட்டுப்பாட்டுல நிர்வாகம் வந்ததும், நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சாரு... ஆனா, பிப்ரவரி 26ல் தண்ணீர் பிரச்னைக்கு, பி.டி.ஓ.,வை கண்டிச்சு, அ.தி.மு.க., வினர் சாலை மறியல் செஞ்சாங்க...
''இதனால, சத்யேந்திரனை மாத்திட்டாங்க... புதுசா, முருகன் என்பவரை, பி.டி.ஓ.,வா போட்டிருக்காங்க... முருகன், தனக்கும் பிரச்னை வந்துடக் கூடாதுன்னு, ஏற்கனவே பி.டி.ஓ.,க்கள் அமர்ந்திருந்த இருக்கையை, வாஸ்து பார்த்து, திசை மாத்தி போட்டு உட்கார்ந்திருக்காருங்க... அவரது வாஸ்து சென்டிமென்ட் பலிக்குமான்னு போகப் போகத் தான் தெரியு முங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பதவிக்கு பேரம் நடக்கு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளரா இருந்தவர், இட மாறுதல்ல மாநில ஊரக வளர்ச்சி முகமைக்கு போயிட்டாரு... இந்த பணியிடம், இப்ப காலியா கிடக்கு வே...
''அதே போல, மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கியிருக்காவ... இந்த பணியிடங்களை நிரப்புறதுக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, முறையான அறிவிப்பு எதையும் வெளியிடல வே...
''பசையான இந்த பதவிகளுக்கு, துறை ரீதியா சிலர் விண்ணப்பிச்சிருக்காவ... சில உயர் அதிகாரிகளை பார்த்து, பேரமும் பேசிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''புறமுதுகு காட்டி மனு குடுத்திருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''டில்லியில், சமீபத்துல மாவட்ட, காங்., தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்துச்சோல்லியோ... தமிழகத்தைச் சேர்ந்த, 61 மாவட்ட தலைவர்கள் இதுல கலந்துண்டா ஓய்...
''அதுல எப்படி பேசணும்னு பயிற்சி தர்ற விதமா, டில்லியில மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நடத்திய ஆலோசனை கூட்டத்தை, 10 மாவட்ட தலைவர்கள் புறக்கணிச்சுட்டா ஓய்...
''காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் பங்கேற்ற கூட்டத்துல, வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரவியத்துக்கு மட்டும் பேச வாய்ப்பு குடுத்திருக்கா ஓய்...
''கூட்டம் முடிஞ்சதும் ராகுல், கார்கே முன்வரிசையில் அமர்ந்திருக்க, அவங்க பின்னாடி மாவட்ட தலைவர்கள் நின்னு குரூப் போட்டோ எடுத்துண்டா... அப்ப, சில மாவட்ட தலைவர்கள், தங்களது கோரிக்கை மனுக்களை பின்பக்கமா இருந்து கார்கே, ராகுலிடம் நீட்டியிருக்கா ஓய்...
''இப்படி புறமுதுகு வழியா மனுக்கள் தந்ததை அவா ரசிக்கலையாம்... வேண்டா வெறுப்பா வாங்கியிருக்கா ஓய்...
''சில மாவட்ட தலைவர்கள் போட்டோவுக்கு நிக்கறச்சே, ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி முண்டியடிச்சிருக்கா... கேரள தலைவர்கள் எல்லாம் ராணுவ ஒழுங்குடன், வரிசையா நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுக்க, நம்மாட்கள் பண்ணிய கூத்தை பார்த்து, டில்லி தலைவர்கள் நொந்து போயிட்டா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெஞ்ச் காலியானது.


மேலும்
-
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவுக்கு கட்டண சலுகை; யார் யாருக்கு பொருந்தும்?
-
இரு ஆசிரியர்கள் மீது பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு: விளக்கம் கேட்டு இணை இயக்குனர் 'நோட்டீஸ்'
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்
-
நான் யோகி; அரசியல் எனது முழு நேர வேலையல்ல: சொல்கிறார் உ.பி., முதல்வர்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது