'டவுட்' தனபாலு

2

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: அ.தி.மு.க.,வில் நான் இணைய வேண்டும் என சொல்லவில்லை. பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றாக இணைந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்கிறேன். 'அ.தி.மு.க., எந்த காலத்திலும் வெற்றி பெறக் கூடாது' என்ற நோக்கத்தில், பழனிசாமி தொடர்ந்து செயல்படுகிறார். அவர் தலைமைக்கு வந்த பின், ஒரு தேர்தலில் கூட கட்சி வெற்றி பெறவில்லை. எனவே, அவர் பொதுச்செயலர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., எந்த காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என பழனிசாமி நினைச்சிருந்தால், டில்லிக்கு போய் அமித் ஷாவை சந்தித்திருப்பாரா... பழனிசாமியா, பன்னீர்செல்வமா என்ற நிலை வந்தால், பா.ஜ., மேலிடம், 'டவுட்'டே இல்லாம பழனிசாமி பக்கம் தான் சாயும் என்பதை மறந்துடாதீங்க!


அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 11 மாதங்கள் உள்ளன. இப்போது எந்த செய்தி சொன்னாலும் அது நிலைக்காது. யாருடன் கூட்டணி அமைத்தாலும், அதுகுறித்து பத்திரிகையாளர்களை அழைத்து நிச்சயம் சொல்வோம். தி.மு.க., தவிர, மற்ற எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது. தேர்தல் நேரத்தில், ஒருமித்த கருத்துடைய கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்வோம்.

டவுட் தனபாலு: அந்த ஒருமித்த கருத்துடைய கட்சிகள்ல, பா.ஜ.,வும் அடக்கம் தானே... பா.ஜ., கூட்டணியை இப்பவே உறுதிப்படுத்திட்டா, அவங்க கட்டுப்பாட்டுல செயல்படணும்... அதனால, தேர்தல் நேரத்தில் கூட்டணியை அறிவிக்கலாம் என்ற மறைமுக திட்டத்தில் நீங்க இருப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!


பத்திரிகை செய்தி: ஏற்கனவே, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு, 15 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், தற்போது, 16வது முறையாக மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: புதுச்சேரியில், என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி தான் நடக்குது... அப்படியிருந்தும், மாநில அந்தஸ்துக்காக அவங்களை இப்படி ஏங்க வைப்பது ஏன்... ஒரு வேளை, புதுச்சேரியில், பா.ஜ., தனித்து ஆட்சிக்கு வந்தால், மாநில அந்தஸ்து தந்துட்டு, அந்த பெருமையை தட்டிட்டு போகணும்னு காத்துட்டு இருக்காங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

Advertisement