லால்புரத்தில் கிராம சபை கூட்டம் பள்ளியை விரிவுபடுத்த தீர்மானம்

சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சியோடு லால்புரம் ஊராட்சியை இணைக்கக் கூடாது என, கிராம சபைக் கூட்டடத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

சிதம்பரம், லால்புரம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் அறிக்கை வாசித்தார்.

குடிநீர் சிக்கனம், சுகாதாரமான வாழ்க்கை வழிமுறைகள், கலைஞர் கனவு இல்ல பயனாளி பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டது.

400 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெறும் லால்புரம் ஊராட்சியை சிதம்பரம் நகராட்சியோடு சேர்க்கக் கூடாது.

லால்புரம் நடுநிலைப் பள்ளியை விரிவுபடுத்த சிதம்பரம் நகராட்சியிடம் இருந்து 3 ஏக்கர் நிலத்தை வாங்கி கட்டடம் கட்ட வேண்டும்.

காமராஜர் நகருக்கு புதிய போர்வெல் மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க வேண் டும். பாசி முத்தான் ஓடையில் படித்துறைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய மேற்பார்வையாளர் செல்வம், குடிமை பொருள் வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் சேகர், மலர்விழி, ராதா, தமிமுன் அன்சாரி மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

Advertisement