'மொபிலிட்டி' இன்ஜினியரிங்கில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது; மஹிந்திரா துணைத் தலைவர் சங்கர் வேணுகோபால் பேச்சு

புதுச்சேரி : தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா டெக்னோ இன்னோவேஷன் துணைத் தலைவர் சங்கர் வேணுகோபால் பேசியதாவது:

உலக தொழில்நுட்பம் வளர்ச்சிக்கேற்ப ஆட்டோமேஷன் இன்ஜினியரிங், மொபிலிட்டி இன்ஜினியரிங் தாக்கம் பெரிய அளவில் இருக்கும். இதில், மொபிலிட்டி இன்ஜினியரிங் அன்றாட வாழ்வில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும். இது, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பின் எதிர்காலத்தை இயக்கத்தை நிர்ணயிக்கும் பிரமாண்டமான பொறியியல் துறையாக கருதப்படுகிறது. இதில், மின்சார வாகனங்கள், தன்னியக்க ஓட்டுநர், மேம்பட்ட உற்பத்தி, ரோபாட்டிக்ஸ் ஆகியவை அடங்கும்.

இந்த மொபிலிட்டி இன்ஜினியரிங் துறையில் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இருப்பினும், இந்த துறையில் சாதிக்க மெக்கானிக், இ.சி.இ., கம்ப்யூட்டர் புரோகிராமிங் தெரிந்திருக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு படிப்பை மட்டுமே வழங்கும். மற்றவற்றை நீங்கள் தான் இணையம் அல்லது ஏனைய கல்வி நிறுவனங்களில் தேடிப்பிடித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மொபிலிட்டி இன்ஜினியரிங் துறை வேகமாக வளர்ந்து வருவதால் 2030ல் பார்த்தால் அனைத்து எலக்ட்ரிக் கார்களாக இருக்கும். அதில் உள்ள பாகங்கள் அனைத்தும் ஸ்மார்ட்டாக இருக்கும்.

இப்போதே தானியங்கி கார் ஓட்டும் நிலை வந்துவிட்டது. அந்த தொழில்நுட்பம் இரண்டாம் நிலையில் உள்ளது. இந்த தொழில்நுட்பம் ஐந்தாம் நிலையை தொடும்போது அசத்தலாக இருக்கும். ஒரு கார் இன்னொரு காருடன் பேசும் நிலையை தொடும். வாகனங்கள் சிக்னல் கூட பேசும். இதுதவிர வாகனங்கள் பார்க்கிங், டோல்கேட், பாதசாரிகளிடம் நேரடியாக பேசும் தொழில்நுட்பம் அதிகரிக்கும்.

இதன் மூலம் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்தாலும் அதனுடன் கம்யூனிகேஷன் தொழில்நுட்பமும் சேர்ந்தே வளரும் என்பதே உண்மை. இ.சி.இ., எனப்படும் துறையிலும் இருந்து ஏராளமான தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே உள்ளன.

சென்சார், கன்ட்ரோல் எல்லாமே எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள். எனவே, மொபிலிட்டி இன்ஜினியரிங் இ.சி.இ., பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதுதவிர சாப்ட்வேர், புரோகிராமிங் கூட மொபைலிட்டி இன்ஜினியரிங் துறையில் முக்கியத்துவம் பெறும். இத்துறை படித்தவர்களும் மொபிலிட்டி இன்ஜினியரிங் துறைக்கு தேவைப்படுவர்.

எனவே, எந்த துறையை எடுத்து படித்தாலும் புரோகிராமிங் கற்றுக்கொள்வது அவசியம். எந்த கண்டுபிடிப்பாக இருந்தாலும் அது சுற்றுச்சூழலை பாதிக்க கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement