எப்.எல். 2 பார்; போராட்டத்திற்கு அழைக்கும் போஸ்டரால் பரபரப்பு

போத்தனூர்; கோவை சுந்தராபுரம் அடுத்து, எல்.ஐ.சி., காலனி அருகே குறிச்சிபுதூர் உள்ளது. வீடுகள், தொழிற்கூடங்கள் உள்ள இவ்விடத்தில் கடந்தாண்டு எப்.எல்.2 பார் அமைக்க பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்பகுதியில் வசிப்போரின் எதிர்ப்பால் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் இப்பணி மீண்டும் துவங்கியது. அதிர்ச்சியடைந்த மக்கள் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து தற்போது பணி மீண்டும் நிறுத்தப்பட்டது.

அதுபோல் சுந்தராபுரத்திலிருந்து, போத்தனூர் செல்லும் சாரதா மில் சாலையில், காந்திஜி சாலை சந்திப்பு எதிரே மற்றும் ஆட்டுத்தொட்டி பஸ் ஸ்டாப் அருகே என இரு இடங்களில், டாஸ்மாக் பார்கள் செயல்படுகின்றன.

இதில் ஆட்டுத்தொட்டி பஸ் ஸ்டாப் அருகேயுள்ள பாரில், அடிக்கடி குடிமகன்கள் மோதிக் கொள்வர். மக்கள் நடந்து செல்லவும், பஸ்சிற்காக காத்திருக்கவும் முடியாத அவலம் தொடர்கிறது.

இத்தகைய சூழலில் காந்திஜி சாலை எதிரேயுள்ள டாஸ்மாக் அருகே எப்.எல்.2 பார் அமைக்க பணி நடக்கிறது. இவ்விரு பகுதிகளிலும் எப்.எல்.2 பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்களை போராட அழைப்பு விடுத்து, சுந்தராபுரம், சிட்கோ, போத்தனூர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் ஒன்றில், 'வீடுகளின் நடுவே மதுக்கடையா, வீட்டுக்குள் இருக்க வேண்டாம், வீதிக்கு வா, மாபெரும் போராட்ட களம் விரைவில்' எனவும், மற்றொன்றில், 'ஏற்கனவே இரண்டு, மீண்டும் இன்னொன்றா. போத்தனூர் சாரதா மில் சாலை கடை வீதியா அல்லது மதுக்கடைகளின் வீதியா' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போஸ்டர்கள் மக்கள், சமூக ஆர்வலர்கள் பெயரில் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசாரும் இதனை ஒட்டியது யார் என விசாரிக்கின்றனர்.

Advertisement