மூக்கையூர் துறைமுகத்துக்கு செல்லும் வழியில் சீமை கருவேலம் ஆக்கிரமிப்பு

சாயல்குடி : சாயல்குடி அருகே மூக்கையூர் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் வழியில் பாலத்தின் அருகே 500 மீ.,க்கு ரோட்டின் இரு புறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.

நாள்தோறும் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் நகர் பகுதியில் இருந்து மூக்கையூர் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்திற்கு ஏராளமான வாகனங்களில் மீன் ஏற்றி செல்வதற்காக வருகின்றனர். இந்நிலையில் சாலையின் இரு புறங்களிலும் அடர்ந்து வந்துள்ள சீமைக் கருவேல மரங்களால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அப்பகுதி இருள் சூழ்ந்துள்ளது.

மூக்கையூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 4 லட்சத்தில் கட்டப்பட்ட மீன்கள் உலர வைக்கும் தளம் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. அரசு நிதி வீணடிப்பு செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் தேங்கும் குப்பையை உடனுக்குடன் அள்ளுவதற்கு வழியில்லாத நிலை தொடர்கிறது.

இதனால் அப்பகுதியில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே மூக்கையூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மீன்வளத் துறையினர் ஒன்றிணைந்து அப்பகுதியை பராமரிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement