சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் வீழ்ச்சி சந்தையை வறுத்தெடுக்கும் வரி பிரச்னை

மும்பை:அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிக்க இருக்கும் இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்களால், நடப்பு நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான நேற்று, நிப்டி 353 புள்ளிகளும், சென்செக்ஸ் 1,400 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டன.

கடந்த 2020ம் ஆண்டுக்கு பின், சந்தை குறியீடுகளுக்கு மோசமான முதல் வர்த்தக நாளாக அமைந்தது. நேற்றைய வீழ்ச்சியால், முதலீட்டாளர்கள், கிட்டத்தட்ட 3.5 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.

சந்தை வீழ்ச்சிக்கான காரணங்கள்:

1. டிரம்பின் வரி



டிரம்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பாரபட்சமின்றி, அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, உலகளாவிய வர்த்தகப் போர் அபாயம், நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த கவலை அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்று, முதலீடுகளை திரும்ப பெற்றதால், சந்தை வீழ்ச்சி கண்டது.

2. ஐ.டி., நிறுவனங்கள்



இந்திய ஐ.டி., நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது சந்தேகம் என்ற சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், டிரம்பின் வரிவிதிப்பு கொள்கையால், அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சூழல் அதிகரித்து வருகிறது.

இதனால், நிப்டி ஐ.டி., குறியீடு, நேற்று 2.50 சதவீதத்துக்கு மேல் சரிவை கண்டது. கடந்த ஓராண்டில் மட்டும், நிப்டி ஐ.டி.,குறியீடு 17 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

3.கச்சா எண்ணெய் விலை



சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்து காணப்படுகிறது.

இது நீடிக்கும்பட்சத்தில், வரும் காலாண்டில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவுக்கு இறக்குமதி செலவு அதிகரித்து, நீண்டகால வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்தும் சந்தையை பாதித்தது.

4. ரூபாய் மதிப்பு சரிவு



அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், உலகளாவிய சந்தை போக்கு, பரஸ்பர வரி விதிப்பு கவலைகளால், ரூபாய் மதிப்பு மீண்டும் சரிந்து வருகிறது.

நிபுணர்கள் கணிப்பு



டிரம்பின் பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பு, வரும் நாட்களில் இந்திய சந்தையின் போக்கை தீர்மானிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

எதிர்ப்பார்த்ததைவிட வரி குறையும்பட்சத்தில், உலகளாவிய வர்த்தகத்துடன் தொடர்புடைய மருந்து தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் விரைவான ஏற்றம் காணலாம். ஒருவேளை, அதிக வரி விதிக்கப்பட்டால், சந்தை மீண்டும் ஒரு திருத்தத்துக்கு இட்டு செல்லும் என, சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement