தினமலர் தயைங்கம்: நீதிபதி வீட்டில் பணக்குவியல் முழு விசாரணை தேவை !

7

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், கடந்த, 14-ம் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது. அதை அணைப்பதற்கு தீயணைப்பு துறையினர் சென்ற போது, ஸ்டோர் ரூமில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கியதாக தகவல் வெளியானது, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரித்து அறிக்கை அளிக்கும்படி, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், நீதிபதியிடம் விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக, மூன்று பேர் குழுவையும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நியமித்துள்ளார்.

இதற்கிடையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா, இதற்கு முன் பணிபுரிந்த உ.பி.,யின் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அத்துடன், தன் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கும், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனாலும், நீதிபதி வர்மாவுக்கு பணி எதுவும் ஒதுக்க வேண்டாம் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளது தற்போதைய நிலையில் சரியான நடவடிக்கையே.

அதே நேரத்தில், நீதிபதி வர்மா வீட்டில் கண்டு பிடிக்கப்பட்ட பணம், ஊழல் வாயிலாக பெற்ற பணம் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம். ஏனெனில், இது ஒரு நீதிபதியின் நேர்மை சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. ஒட்டுமொத்த நீதித்துறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை தொடர்பான விஷயமாகும்.

தன் வீட்டில் கட்டுக் கட்டாக இருந்த பணத்திற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என, நீதிபதி வர்மா கூறியிருந்தாலும், அவருக்கு தெரியாமலேயே, அவரது வீட்டில் பணம் வைக்கப்பட்டது எப்படி? அப்படி வைக்கப்பட்டு இருந்தால், அதைச் செய்தது யார்? நீதிபதிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, சிலர் இதைச் செய்துள்ளனர் அல்லது சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றால், அவர்கள் யார், யார் என்பது கண்டறியப்பட வேண்டும். அத்துடன், நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுக்கு விரைவாக தீர்வு காணப்படவில்லை எனில், நீதித்துறை மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகி, மக்கள் மத்தியில் அவநம்பிக்கை அதிகரிக்கவே செய்யும்.


எந்த ஒரு விவகாரத்திலும், சமீப நாட்களாக நீதித்துறை முழுமையாக பொறுப்பேற்பதில்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. குறிப்பாக, நீதிபதிகளின் தனிப்பட்ட பல விவகாரங்களில், குறைபாடுகளும், குளறுபடிகளும் உணரப்பட்டன. சில நீதிபதிகளுக்கு எதிரான விசாரணைகளும் தோல்வியில் முடிவடைந்தன. அதாவது, நிதி முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான சில குற்றச்சாட்டுகளில், யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வலுவான கேடயம் தேவை




நீதிபதிகளுக்கு எதிராக உள்நோக்கத்துடனோ, அவர்களை களங்கப்படுத்தும் நோக்கத்துடனோ குற்றம் சுமத்தப்பட்டால், அதிலிருந்து அவர்களை காக்க, சட்ட ரீதியாக ஒரு வலுவான கேடயம் தேவை. அப்போது தான், போலியான குற்றச்சாட்டுகளில் இருந்து நேர்மையான நீதிபதிகளை காப்பாற்ற முடியும். அதேநேரத்தில், சட்ட மீறல்கள் மற்றும் ஊழல் குற்றங்களில் ஈடுபடுவோரை காப்பாற்றும் கேடயமாக, அந்தச் சட்ட விதிகள் மாறக்கூடாது. அப்படிப்பட்ட சிறப்பான செயல்பாட்டு முறையை, மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

நீதித்துறை மீதும், நீதிபதிகள் மீதும் ஊழல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்படும் போது, அது குறித்து விரிவான, முறையான, பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை நடத்தி, அதன் உண்மை தன்மையை உறுதி செய்வது அவசியம். அப்போது தான் ஆங்காங்கே சில புல்லுருவிகள் உருவானாலும், அவர்களை களையெடுக்க முடியும்; களங்கத்தை துடைக்க முடியும்.

நீதித்துறையின் நேர்மையையும், பொறுப்புடைமையையும் உறுதி செய்ய வேண்டும். நீதித்துறையின் தனித்தன்மை மற்றும் சுதந்திரம், அதன் நேர்மை மற்றும் ஊழல் இல்லாத தன்மை வாயிலாகவே உறுதி செய்யப்பட வேண்டும்.

Advertisement