முதுகுளத்துாரில் அடிப்படை வசதிகள் இல்லாமல்... மக்கள் தவிப்பு; அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொகுதியில் அவலம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி ஜாகிர் உசேன் 2வது தெருவில் வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்கியும், ரோடு, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொகுதியில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பேரூராட்சி 14வது வார்டு ஜாகிர் உசேன் 2வது தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பல ஆண்டுகளாக முறையாக ரோடு வசதி இல்லாததால் மக்கள் நடப்பதற்கே சிரமப்படுகின்றனர்.
வீடுகளுக்கு முன்பு ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவிக்கின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா கூறியதாவது: ஜாகிர் உசேன் 2வது தெருவில் முதுகுளத்துார் பகுதி கழிவுநீர் முழுவதுமாக இங்குள்ள வீடுகளைச் சுற்றி குளம் போல் தேங்குகிறது. இதனால் இரவு நேரங்களில் கொசுத் தொல்லையால் அவதிப்படுகின்றனர். தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ரோடு வசதி இல்லாததால் மழைக்காலங்களில் நடப்பதற்கே சிரமப்படுகின்றனர்.
பேரூராட்சி சார்பில் திறந்து விடப்படும் தண்ணீரும் முறையாக வருவதில்லை. கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் தெருவிளக்கு இல்லாமல் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது.
ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்கு முன்பு ஆக்கிரமித்துள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்கு குடிநீர் , சமையல் காஸ் உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கு சிரமமாக உள்ளது. இதனால் மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவிக்கின்றனர்.
இதுகுறித்து கலெக்டர், பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் தெருவில் ஆய்வு செய்து உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
இத்தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சராக உள்ள ராஜ கண்ணப்பன் எங்கள் பிரச்னைகளுக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை என்று இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.