ஊருணியில் கழிவுநீர் பாழாகும் நிலத்தடி நீர்

விருதுநகர் : விருதுநகர் குல்லுார்சந்தை உருணியில் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடிநீரின் உவர்ப்பு தன்மை அதிகரித்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

விருதுநகர் குல்லுார் சந்தை அணையில் இருந்து வடிகால் மூலம் வெளியேறும் நீர் குல்லுார்சந்தை கிராமம் வழியாக ஊருணிக்கு செல்கிறது. இந்த ஊருணியில் கழிவுநீர் கலப்பதாக பல ஆண்டுகளாக புகார் இருந்து வருகிறது. குடியிருப்புகளின் கழிவுநீர் செல்ல முறையான வாறுகால் வசதி இல்லை. இதனால் அணையில் இருந்து ஊருணி செல்லும் ஓடையில் கழிவுநீர் விடப்படுகிறது. இது நாளடைவில் ஊருணியை பாதித்து பச்சை நிற பாசிகள் படிய செய்து விட்டது. 2 ஆண்டுகள் முன்பு கூட இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்தனர். அதற்கு பின் குளிக்க அச்சப்படும் சூழல் உள்ளது. தோல் பிரச்னைகள் வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

மேலும் இதன் நிலத்தடி நீரும் உவர்ப்பு தன்மை அதிகரித்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஏற்கனவே குடிநீர் பிரச்னை இப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், இதை சரி செய்ய ஊருணியை சுத்தம் செய்து கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

Advertisement