தொழுநோய் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு சிகிச்சை துவக்கம்

கோவை: கோவையில் தொழுநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ், ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணி நிறைவு பெற்றுள்ளது. புதிதாக, நோய் அறிகுறியுடன் இருந்த 7 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை துவக்கப்பட்டுள்ளது.

தொழுநோய் முற்றிலும் ஒழிக்கும் வகையில், சிகிச்சை அளிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொழுநோய் ஒழிப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

கடந்த 100 நாட்கள் கோவை மாவட்டத்தில் தொழுநோய் பாதிப்பு கண்டறியும் பணிகள் 'ஹாட்ஸ்பாட்' ஆக கண்டறியப்பட்ட, சூலுார் மற்றும் ஆனைமலை பகுதிகளில் நடைபெற்றது.

கோவை மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய் ஒழிப்பு) சிவக்குமாரி கூறுகையில், '' கோவையில் தேர்வு செய்யப்பட்ட ஆனைமலை, சூலுார் பகுதிகளில் 223 குழுக்கள் கடந்த 100 நாட்களாக ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.

4.95 லட்சம் மக்களை ஆய்வு செய்துள்ளோம்; ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகள் முடிந்துள்ள சூழலில், புதிதாக 7 பேர் புதிதாக தொழுநோய் பாதிப்புடன் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சிகிச்சைகள் துவக்கப்பட்டுள்ளன. தவிர, வழக்கமான ஆய்வு பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெறும்.

உணர்ச்சியற்ற தேமல் உள்ளவர்கள், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால், இப்பாதிப்பை முற்றிலும் ஒழித்துவிடலாம், '' என்றார்.

Advertisement