சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கவே வழக்கு 'டாஸ்மாக்' விவகாரத்தில் அமலாக்க துறை பதில் மனு
சென்னை:'அமலாக்கத்துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் நோக்கில்,
முன்கூட்டியே தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல'
என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதிலளித்துள்ளது.
சென்னையில்
உள்ள, 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம், 6 முதல் 8ம் தேதி வரை,
அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட
இந்தச் சோதனையை, சட்ட விரோதமானது என அறிவிக்கக்கோரி, சென்னை உயர்
நீதிமன்றத்தில், தமிழக உள்துறை செயலர் மற்றும், 'டாஸ்மாக்' நிர்வாக
இயக்குனர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களுக்கு,
அமலாக்கத்துறை தரப்பில், அதன் சென்னை மண்டல உதவி இயக்குநர் விகாஸ்குமார்
பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன் விபரம்:
அமலாக்கத்துறையின்
சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் நோக்கில், முன்கூட்டியே இந்த
வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.
சோதனைக்கு எதிராக, அமலாக்கத்துறையிடம் முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ள
போதும், அதை அணுகி நிவாரணம் கோரவில்லை. மாறாக, நேரடியாக உயர் நீதிமன்றத்தை
நாடியது தவறு.
சோதனை நடத்துவதற்கான, 'வாரன்ட்' காட்டி,
வலுக்கட்டாயமாக கையெழுத்து பெற்றதாக, தமிழக அரசு கூறிய குற்றச்சாட்டு
சரியல்ல. சோதனை தொடர்பான, 'வாரன்ட்' சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த
வழக்குகள் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது. முறையான எந்த
ஆதாரங்களும் இல்லாமல், இந்த சோதனை நடத்தப்படவில்லை.
இந்த சோதனைகள்
முறையான சட்ட அங்கீகாரத்துடனும், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட
விதிகளுக்கு முழுமையாக இணங்கியும் மேற்கொள்ளப்பட்டன. நம்பகமான உளவுத்துறை
தகவல்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களாக பதிவு செய்யப்பட்ட பல
எப்.ஐ.ஆர்., அடிப்படையில் தான் அமலாக்கத்துறை விசாரணையை துவங்கியது.
சோதனையின்
போது, டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்கள் உணவு அருந்தவும், ஓய்வெடுக்கவும்
அனுமதி வழங்கிய பின் தான், வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
அதிகாரிகளுக்கான சுதந்திரத்தை மீறியதாக, டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு தொடர
முடியாது; சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் வழக்கு தொடர முடியும்.
பெண்
அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் தான், வீட்டுக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர். ஆதாரங்களை சேகரிக்க மட்டுமே, அதிகாரிகளின் மொபைல் போன்கள்
பறிமுதல் செய்யப்பட்டன. சோதனையின் போது, டாஸ்மாக் ஊழியர்கள், அதிகாரிகள்,
60 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை என்ற பெயரில், இரவு வரை சிறை
பிடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக, அரசு கூறும் குற்றச்சாட்டை
மறுக்கிறோம்.
பண மோசடி அச்சுறுத்தல் ஒரு கடும் குற்றம். இது நாட்டின் சமூக மற்றும்
தொடர்ச்சி ௪ம் பக்கம்
விசாரணையை...
முதல் பக்க தொடர்ச்சி
பொருளாதார
கட்டமைப்பை பாதிக்கும். அது மட்டுமின்றி, பயங்கரவாதம், போதைப்பொருள்
தொடர்பான குற்றங்கள் போன்ற பிற கொடூரமான குற்றங்களையும் ஊக்குவிக்கும்.
பொது நலன் மற்றும் பொது வளங்களை முறையாகப் பயன்படுத்துவதை உறுதி
செய்வதற்காக, அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டு உள்ளதை கருத்தில்
கொண்டு, தற்போதைய விசாரணை அவசியம்.
எனவே, சட்டபூர்வமான சோதனையை
முடக்கும் நோக்கில், சட்ட விரோதமாக ஊழியர்கள், அதிகாரிகளை சிறை
பிடித்ததாகவும், துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை கூறி, தமிழக அரசு
தாக்கல் செய்துள்ள இந்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'தமிழக காவல் துறை நள்ளிரவில் சோதனை நடத்தியது இல்லையா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.'டாஸ்மாக்' அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சிறப்பு பிளீடர் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தனர்.தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி ''டாஸ்மாக் அலுவலகத்தில், 60 மணி நேரம் வரை சோதனை நடத்தி, பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர். இது, மனித உரிமை மீறல். அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவுக்கு, பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'தமிழக காவல் துறை நள்ளிரவில் சோதனை நடத்தியது இல்லையா' என்று, கேள்வி எழுப்பினர். அதற்கு, 'நள்ளிரவில் சோதனை நடத்தியது இல்லை' என, அட்வகேட் ஜெனரல் பதிலளித்தார்.மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ ''தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல'' என்றார்.இதையடுத்து, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை, ஏப்., 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த
அமலாக்கத்துறை சோததனையை எதிர்த்து, தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த
வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி கே.ராஜசேகர் அடங்கிய
அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்
ஆஜராகி, ''டாஸ்மாக் துறையை வைத்திருக்கும் அமைச்சரின் வழக்கறிஞர், தற்போது,
இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் உள்ள நீதிபதி ஒருவரின் சகோதரர். எனவே,
இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்கக் கூடாது,'' என்று முறையீடு
செய்தார்.இந்த முறையீட்டை, நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
மேலும்
-
கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை
-
மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
-
போலீசிடம் தப்பிக்க முயற்சி; ரவுடிக்கு கால் எலும்பு முறிவு
-
ரவுடி சகோதரர்கள் குண்டாசில் கைது
-
சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி; பண்ருட்டி அருகே ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது
-
காதல் மனைவியை மீட்டு தர எஸ்.பி.,யிடம் தொழிலாளி புகார்