கல்லுாரி மாணவி இறப்பில் மர்மம் சடலம் தோண்டியெடுத்து விசாரணை

திருப்பூர்:பல்லடத்தில் அரசு கல்லுாரி மாணவி இறந்த விவகாரத்தில் போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இதனால், வி.ஏ.ஓ., அளித்த புகாரின் பேரில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. வெல்டிங் வேலை செய்து வருகிறார். அவரின் மனைவி விசைத்தறி தொழிலாளி. தம்பதிக்கு வித்யா என்ற மகளும், சரவணன் என்ற மகனும் உள்ளனர். வித்யா கோவையில் உள்ள அரசு கல்லுாரியில் எம்.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த, 30ம் தேதி பெற்றோர் சர்ச்சுக்கு சென்றனர். அவரது அண்ணன் வெளியில் சென்ற நிலையில், வித்யா மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். பெற்றோர் மதியம் வீட்டுக்கு திரும்பிய போது, வித்யாவின் மீது பீரோ சரிந்து விழுந்து இருந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் இருந்தார். உடனே, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்த போது வித்யா இறந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது உடலை குடும்பத்தினர், உறவினர்கள் அருகே பருவாயில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசாருக்கு புகார் எதுவும் செய்யவில்லை. வித்யா இறந்தது தொடர்பாக, அவரை காதலித்து வந்த வெண்மணி என்பவர் பருவாய் வி.ஏ.ஓ., பூங்கொடியிடம் புகார் அளித்தார். தொடர்ந்து, வி.ஏ.ஓ., புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரித்தனர். இளம்பெண் இறந்து தொடர்பாக, வித்யா வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று மாலை, வித்யாவின் சடலத்தை தோண்டியெடுத்து, மயானத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
வித்யா, விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற வாலிபரை காதலித்தார். அவர் பெண் கேட்டு வந்தார். ஆனால், பெற்றோர் மறுத்தனர். 30ம் தேதி காலையில் பெற்றோர் சர்ச்சுக்கு சென்ற நிலையில், வீட்டில் வித்யா மீது பீரோ சரிந்து விழுந்து சிக்கி இறந்தது தெரிந்தது. போலீசாருக்கு உரிய தகவல் கொடுக்காமல் சடலத்தை அடக்கம் செய்த காரணமாக இறப்பில் சந்தேகம் உள்ளது.
இதனால், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு நேற்று மாலை பிரேத பரிசோதனை நடந்தது. மருத்துவ அறிக்கையின் படி, அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். அருகில் வசிக்கும் சிலர் கூறுகையில், 'பெற்றோர் சர்ச்சுக்கு சென்றதும், வித்யா வெளியில் நின்று மொபைல் போனில் போட்டோ எடுத்ததாக கூறினர். அவரது மொபைல் போனில் போட்டோ உள்ளது. வித்யா மீது பீரோ தான் விழுந்ததா அல்லது வேறு யாராவது வீட்டுக்குள் வந்தார்களா என்று விசாரணை நடக்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
