தோனிக்கு என்ன பிரச்னை: மவுனம் கலைத்தார் பிளமிங்

கவுகாத்தி: ''தோனியின் முழங்கால் பகுதியில் பிரச்னை உள்ளது. தொடர்ந்து 10 ஓவர் பேட் செய்ய இயலாது,'' என ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.
பிரிமியர் அரங்கில் 5 கோப்பை வென்ற சென்னை அணி, இம்முறை தடுமாறுகிறது. தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. பேட்டிங் வரிசையில் 'தல' தோனி பின்வரிசையில் வருவது பற்றி அதிகம் விமர்சிக்கப்படுகிறது. பெங்களூருவுக்கு எதிராக 9வது இடத்தில் வந்த இவர், 16 பந்தில் 30 ரன் எடுத்தார். நேற்று முன் தினம் ராஜஸ்தானுக்கு எதிராக 7வது இடத்தில் வந்தார். 11 பந்தில் 16 ரன் எடுத்தும், அணியை கரை சேர்க்க முடியவில்லை. தோனி முன்னதாக களமிறங்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 43 வயதான நிலையில், அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இடது முழங்கால் காயத்துக்கு 2023ல் ஆப்பரேஷன் செய்து கொண்டார். இதிலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. 'கீப்பிங்'கில் அசத்தினாலும், முன்வரிசையில் களமிறங்குவது கடினம்.
10 ஓவர் கடினம்: இது குறித்து சென்னை பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில்,''தோனியின் இடது முழங்கால் முன்பு போல இல்லை. தேய்மானம் ஏற்பட்டுள்ளது. இவரால் விரைவாக நகர முடிகிறது. ஆனாலும், தொடர்ந்து 10 ஓவர் பேட் செய்ய இயலாது. உடல்நிலை, போட்டியின் தன்மைக்கு ஏற்ப களமிறங்குவார். இவரது தலைமைபண்பு, விக்கெட்கீப்பிங் தான் அணிக்கு முக்கியம். 13-14வது ஓவரில் தான் களமிறங்குவார்.
ராஜஸ்தானுக்கு எதிராக 'பவர்பிளே' ஓவரில் சென்னை அணி சிறப்பாக செயல்படவில்லை. ஷிவம் துபே அடித்த பந்தை ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் மிகவும் தாழ்வாக பிடித்தது, போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தியது,''என்றார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் கூறுகையில்,''சென்னை அணி தரமான 11 வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் தவிக்கிறது. துவக்கம் தான் அணியின் பலமாக இருந்தது. ஹெய்டன், டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம், கான்வே போன்றோர் அசத்தினர். இம்முறை தனது துவக்க இடத்தை ராகுல் திரிபாதிக்காக தியாகம் செய்தார் கேப்டன் ருதுராஜ். ஆனால் திரிபாதியின் உடல் அசைவே சரியில்லை. இவரை விளையாடும் லெவனில் தேர்வு செய்யக்கூடாது. கான்வேக்கு வாய்ப்பு அளிக்கலாம்,''என்றார்.
'பினிஷிங்' திறன் எங்கே
ராஜஸ்தானுக்கு(182/9) எதிரான போட்டியில் தோனி 7வது இடத்தில் களமிறங்கிய போது, சென்னை வெற்றிக்கு 25 பந்தில் 54 ரன் தேவைப்பட்டன. உடன் ஜடேஜா இருந்ததால், நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் தோனியிடம் பழைய 'பினிஷிங்' திறமையை காண முடியவில்லை. தீக் ஷனா ஓவரில் 6 ரன் தான் எடுக்கப்பட்டன. தேஷ்பாண்டே ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். கடைசி ஓவரில் 20 ரன் தேவைப்பட்ட நிலையில், சந்தீப் சர்மா வீசிய முதல் பந்தில் தோனி அவுட்டாக, சென்னை (176/6), 6 ரன்னில் தோற்றது.
இது பற்றி இந்திய முன்னாள் வீரர் சேவக் கூறுகையில்,''2 ஓவரில் 40 ரன் எடுப்பது எந்த ஒரு வீரருக்கும் கடினம் தான். சமீப காலமாக தோனியின் 'பினிஷிங்' எடுபடவில்லை. கடைசியாக அக்சர் ஓவரில் 23 ரன் (2016) எடுத்தார். 2010ல் தர்மசாலாவில் இர்பான் பதான் ஓவரில் 18 ரன் எடுத்தார். இதே போல சென்னை அணியால் கடந்த 5 ஆண்டுகளாக 180 ரன்னுக்கு மேற்பட்ட ஸ்கோரை 'சேஸ்' செய்ய முடியவில்லை,''என்றார்.
'மேட்ச் வின்னரா'
பல ஆண்டுகளாக இந்தியா, சென்னை அணிகளுக்கு 'மேட்ச் வின்னராக' தோனி இருந்தார். நிறைய போட்டிகளில் எதிரணியின் இலக்கை 'சேஸ்' செய்து வெற்றி தந்தார். ஆனால் 2023 முதல், பிரிமியர் லீக் அரங்கில் சென்னை அணியின் வெற்றியில் தோனியின் பங்களிப்பு குறைந்துள்ளது. சென்னை அணி 'சேஸ்' செய்து வெற்றி பெற்ற 8 போட்டிகளில், 3 ரன் (9 பந்து, 3 இன்னிங்ஸ்) மட்டுமே எடுத்த இவர், தோல்வியடைந்த 7 போட்டிகளில், 166 ரன் (84 பந்து, 13 சிக்சர், 13 பவுண்டரி, 6 இன்னிங்ஸ்) எடுத்திருந்தார்.

மேலும்
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
-
கச்சத்தீவை மீட்க வேண்டும்; சட்டசபையில் முதல்வர் தனி தீர்மானம்
-
இன்ஸ்டாகிராமில் சேட்டை பதிவு: நெல்லையில் வாலிபர்கள் கைது
-
இறந்தவரின் பர்சில் பணம் லபக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
-
மஹா.,வில் சாலை விபத்து; 5 பேர் பலி; 20 பேர் காயம்!
-
உலக அரசியலில் முக்கிய தலைவர்; பிரதமர் மோடிக்கு சிலி அதிபர் போரிக் பாராட்டு