இன்ஸ்டாகிராமில் சேட்டை பதிவு: நெல்லையில் வாலிபர்கள் கைது

3


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே தாமரைக்குளத்தைச் சேர்ந்த மாடசாமி மற்றும் வக்கீம் பாண்டியன் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆயுதங்களுடன் மிரட்டல் விடுத்து பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இருவர் இன்ஸ்டாகிராமில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆயுதங்களுடன் மிரட்டல் விடுத்து பதிவிட்டு இருந்தனர். அவர்கள், இரு தரப்பினருக்கிடையே பிரச்னையை தூண்டும் வகையில், அரிவாளுடன் இருக்க கூடிய புகைப்படத்தையும், சர்ச்சைக்குரிய வசனங்களை பதிவு செய்தும் சமூகவலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பினர்.



இது குறித்து விஜயநாராயணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் ஐ.டி.,யை ஆய்வு செய்த போது அந்த சர்ச்சை பதிவை வெளியிட்டவர் தாமரைக்குளம், நடுத்தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் மாடசாமி (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மிரட்டல்



விஜயநாராயணம் அருகே கொலை செய்யப்பட்ட தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ் துரையின் படத்தை பதிவிட்டு, பகிரங்க மிரட்டல் விடுத்து வீடியோவும் வைரலானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அதே தாமரைக்குளம், தெற்குத்தெருவைச் சேர்ந்த சின்னான் என்ற பேச்சிமுத்து மகன் வக்கீம் பாண்டியன் (19) என்பவர் வீடியோவை பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement